சென்னை :
2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் அறிக்கையில் முதன்மையானதாக கருதப்படுவது மகளிர் உரிமைத்தொகை ரூ.2500-ஆக வழங்கப்படும் என்பதே. த.வெ.க தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக கடந்த 10-ந்தேதி பொறுப்பேற்றதும் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதும் மகளிர் உரிமை தொகை உயர்த்தி வழங்கப்படுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகளோ உரிமை தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க வேண்டும் என வலியுறுத்தின. இதனை தொடர்ந்து போதிய நேரம் இல்லாததால் மே மாதத்திற்கான மகளிர் உரிமை தொகை ரூ.1000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
இருப்பினும், முதலமைச்சர் விஜய், மகளிர் உரிமை தொகையாக ரூ.2,500 வழங்குவது தொடர்பாகவும் திட்டத்தை மறுசீரமைப்பது தொடர்பாகவும் ஆலோசித்து வந்தார்.
இந்த நிலையில், தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தை முழுமையாக மறுசீரமைத்து, அதற்கு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' எனப் புதிய பெயரிட விஜய் தலைமையிலான த.வெ.க. முடிவு செய்துள்ளது.
முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 முதல் ரூ.2.500 மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்க த.வெ.க. திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தத் தகவல் தமிழகப் பெண்கள் மத்தியில் ஒரு புதிய நம்பிக்கையையும், பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.