தமிழக செய்திகள்

TN Assembly Election| ராகுல்காந்தி 18-ந் தேதி தமிழகம் வருகிறாரா?- அரசியல் வட்டாரத்தில் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

குளச்சலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி பிரசாரம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது. தி.மு.க. கூட்டணியின் பிரதான கட்சியான காங்கிரஸ் கட்சியின் மேலிடத் தலைவர்கள் இதுவரை தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வரவில்லை.

இந்தநிலையில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை) காலை 11.30 மணிக்கு பொன்னேரி தொகுதியிலும், மதியம் 1 மணிக்கு சோழிங்கர் தொகுதியிலும், மாலை 4 மணிக்கு திருச்சி துறையூர் தொகுதியிலும் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகி இருந்தது.

ஆனால், நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை குறித்த கூட்டத் தொடர் நடைபெற இருப்பதால் ராகுல்காந்தி 18-ந் தேதி வருவதற்கான வாய்ப்பு இல்லை என்றும், 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வேண்டுமானால் வரலாம் என்றும் காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் வருகிற 20-ந் தேதி (திங்கட்கிழமை) அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் உறுதியாக உள்ளது. அந்த கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அவ்வாறு குளச்சலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி பிரசாரம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. இதில் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுடன் இணைந்து பங்கேற்பாரா? என்ற எதிர்பார்ப்பும், தமிழகத்திற்கு ராகுல்காந்தி எப்போது பிரசாரம் மேற்கொள்ள வருகிறார் என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.