தமிழக செய்திகள்

த.வெ.க.வில் ஒதுக்கப்படுகிறாரா நாஞ்சில் சம்பத்?- வைகோ வருகையும் அதிருப்தியும் பின்னணி என்ன?

த.வெ.க. கூட்டணியில் வைகோ இணைந்த பிறகு நாஞ்சில் சம்பத்துக்கு முக்கியத்துவம் இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் நாஞ்சில் சம்பத்துக்கு என்ன ஆச்சு? என்று பலரும் வலைத்தளங்களில் கேள்வி எழுப்புகிறார்கள்.

த.வெ.க. பிரசார குழு பட்டியலில் இடம் பெறாததால் நாஞ்சில் சம்பத் அதிருப்தி தெரிவித்தார். தனது சமூக வலைதள பதிவில் மன வேதனையை வெளிப்படுத்திய அவர், த.வெ.க.விலிருந்து விலகமாட்டேன் என உறுதியளித்தார். வைகோவின் வருகையால் நாஞ்சில் சம்பத்துக்கு முக்கியத்துவம் குறைந்ததாக கூறப்படுகிறது.

த.வெ.க. கொள்கை பரப்பு செயலாளரான நாஞ்சில் சம்பத்துக்கு இடைத்தேர்தலில் பிரசாரம் செய்ய வாய்ப்பு கொடுக்கவில்லை. பிரசாரகுழு பட்டியலிலும் அவரது பெயர் இடம் பெறவில்லை.

இதனால் அதிருப்தியில் இருந்தவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா. என்னுடைய பகலை யாரும் இருட்டாக்க முடியாது. என்னுடைய வெளிச்சத்தை யாரும் அணைக்க முடியாது. என்னுடைய காற்றை யாரும் வழிமறிக்க முடியாது என்று குறிப்பிட்டு இருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

த.வெ.க. கூட்டணியில் வைகோ இணைந்த பிறகு நாஞ்சில் சம்பத்துக்கு முக்கியத்துவம் இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் நாஞ்சில் சம்பத்துக்கு என்ன ஆச்சு? என்று பலரும் வலைத்தளங்களில் கேள்வி எழுப்புகிறார்கள். இதுபற்றி நாஞ்சில் சம்பத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

நம்பிக்கை

நாஞ்சில் சம்பத்துக்கு எதுவும் ஆகவில்லை. எதுவும் ஆகாது. எனது மனதில் ஒரு வலி இருந்தது. அந்த வலியை வெளிப்படுத்தினேன் அவ்வளவுதான்.

த.வெ.க. நட்சத்திர பட்டியலில் எனது பெயர் இடம் பெறவில்லை. த.வெ.க.வின் பரப்புரை செயலாளரான எனக்கு வாய்ப்பு தரப்படவில்லை. அந்தக் கவலை. ஆற்றாமை, ஆதங்கத்தை எனது பதிவின் மூலம் வெளிப்படுத்தினேன். எனது பதிவு ஏற்கனவே தலைமைக்கு சொன்னதுதான். வலியை வெளிப்படுத்தினேன். அதற்கு நிவாரணம் கிடைக்கும். நான் த.வெ.க.வில் இருந்து விலகவில்லை. விலகமாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT