திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் செய்யப்படும் அரசியலை புரிந்துகொண்டு, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், இந்த வழக்கில் இறுதி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கவேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பேசியுள்ள அவர்.,
கார்த்திகை தீபத்தை முன்வைத்து ஒரு கலவரத்தை மூட்டுவதற்கு, இந்துத்துவா கும்பல் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதை அனைவரும் அறிவோம். கார்த்திகை தீபம் என்பது ஒருநாள் விழா.
எனது சிறுவயதில் பனை ஓலையை கொளுத்துவோம், அதுதான் கார்த்திகை தீபம். வீட்டு வாசல்களில், திண்ணைகளில், குப்பைக்குழிகளில் அகல் விளக்கை வைப்பார்கள். இதுபோன்று அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தீபத்தை கொண்டாடும் மரபு தமிழ்நாட்டில் இருக்கிறது.
கடந்தாண்டு முதல்தான் திருப்பரங்குன்றத்தில் பிரச்சனை எழுப்பப்படுகிறது. இந்த விவகாரத்தை நாடு தழுவிய பிரச்சனையாகவும், இந்துக்களுக்கு எதிராக தமிழ்நாடு அரசு செயல்படுவது போன்றும் தோற்றத்தை ஏற்படுத்த மத வெறியர்கள் முயற்சிக்கிறார்கள்.
உயர் நீதிமன்றத்தை வைத்து பிரச்சனையை எழுப்பினர். ஆனால் திமுக அரசு மக்களின் உணர்வுகளை மதித்து எப்போதும் ஏற்றும் இடத்திலேயே தீபத்தை ஏற்ற உத்தரவிட்டது. அந்த வழக்கின் தொடர்ச்சியாக தற்போதும் உச்ச நீதிமன்றம் ஒரு தவறான உத்தரவை பிறப்பித்தது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் அல்ல அளவைக்கல் என தொல்லியல் துறையினர் தொடர்ந்து கூறிவருகின்றனர். ஆனால் எதற்காக உச்ச நீதிமன்றம் இப்படி தவறான ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.
ஏனென்றால் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடம், கோயிலின் ஆகமவிதிகள், கோயிலின் அறங்காவலர் குழு என இப்படித்தான் தீபம் ஏற்றும் பணி நடைபெறுகிறது. ஆனால் இப்போது யார், யாரோ உரிமை கோருகிறார்கள்.
ஒவ்வொரு கோயிலுக்கும் தனித்தனி பழக்கவழக்கங்கள், ஆகமவிதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. அதன்படியே நேற்று திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது. அதற்காக தவெக அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நேற்று யாரோ தொடர்ந்த வழக்கை நான்தான் விசாரிப்பேன் என மீண்டும் திருப்பரங்குன்றம் வழக்கை கையிலெடுத்திருக்கிறார் ஜி.ஆர். சுவாமிநாதன். திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்குகள் ஒரே நீதிபதியிடம் மீண்டும் மீண்டும் எவ்வாறு விசாரணைக்கு வருகிறது?
இதற்கான விளக்கத்தை தமிழ்நாடு தலைமை நீதிபதி மக்களிடம் விளக்கவேண்டும். ஒரு வழக்கு அவரிடம் சென்று, பின்னர் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு சென்று, அவர்களின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில், மீண்டும் அதுதொடர்பான வழக்கு அவரிடம் எப்படி செல்கிறது?
இரண்டாவது மதுரை மாவட்ட ஆட்சியர் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிறைவேற்றவில்லை என்றால் பதிலளிக்க வேண்டியது உச்ச நீதிமன்றத்திற்கே தவிர உயர் நீதிமன்றத்திற்கு அல்ல. அப்படியானால், உச்ச நீதிமன்றத்தைவிட உயர் அதிகாரம் படைத்தவரா ஜி.ஆர்.சுவாமிநாதன்? என்ற கேள்வி எழுகிறது.
நீதிபதிகள் சட்டத்திற்கு உட்பட்டு, ஆதாரங்களின் அடிப்படையில் செயல்பட வேண்டுமேதவிர, சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் கருத்துகளை திணிப்பது தவறான போக்கில் செல்லும்.
ஜி.ஆர். சுவாமிநாதனின் அத்துமீறல் தொடர்பாக தலைமை நீதிபதி உரிய விசாரணை மேற்கொண்டு, அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் நேற்று திருப்பரங்குன்றத்தில் கூடி அரோகரா கோஷத்துடன் தீபத்திருவிழா வெற்றிக்கரமாக நடந்து முடிந்துள்ளது. ஆனால் தீபத்திருவிழா நடக்காததைப்போல சில அமைப்புகள், சில நபர்கள் பொய் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.
தமிழ்நாட்டில் வேறு எங்கும் பிரச்சனை கிடையாது. திருப்பரங்குன்றத்தை மையமாக வைத்து மீண்டும் ஒரு அயோத்தி சம்பவத்திற்கு திட்டமிடுவோம் என பாஜக முன்னாள் தலைவர் ஹெச்.ராஜா கூறியிருக்கிறார். அவர்களின் நோக்கம் தீபத்திருவிழாவோ, முருகன்மீதான பக்தியோ அல்ல.
மாறாக, ஒரு மதக்கலவரத்தை உருவாக்கவேண்டும் என்பதே அவர்கள் எண்ணம். மண்டைக்காடு தொடங்கி திருப்பரங்குன்றம் வரை பல முயற்சிகளில் இந்த மதவெறி சக்திகள், ஆர்எஸ்எஸ், பாஜக கும்பல் ஈடுப்பட்டு வருகிறது.
ஆனால் தமிழ்நாட்டு மக்கள் மதச்சார்பின்மை, மத ஒற்றுமைக்கு என்றைக்கு ஆதரவாகவும், அதனை பாதுகாக்கக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள். அது நேற்றைய நிகழ்விலும் தெரிந்திருக்கும். ஆகவே, மதவெறி சக்திகளின் இச்செயல்களுக்கு எக்காரணம் கொண்டும் யாரும் இடம்தரக்கூடாது.
அரசு இப்பிரச்சனையை சிறப்பாக கையாண்டுள்ளார்கள். ஒரு தீபம் ஏற்றும் பிரச்சனையை உலக பிரச்சனை போலவும், அகில இந்திய பிரச்சனை போலவும் உச்ச நீதிமன்றம் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை.
அது கோயில் சம்பந்தப்பட்ட பிரச்சனை. இதனை தெரிந்துகொண்டு இறுதி தீர்ப்பில் இதற்கு ஒரு நிரந்தமான தீர்வை அளிக்கும்வகையில், மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்தும் தீர்ப்பை வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.