அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்துப் பேசுவது தேசவிரோதமா?- ஜனநாயகக் குரல்களை ஒடுக்கத் துடிக்கும் தவெக அரசின் அடக்குமுறையும், அதிகார துஷ்பிரயோகமுமே இந்த ஆட்சிக்கு முடிவுரை எழுதும் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்துப் பேசுவது தேசவிரோதமா?- ஜனநாயகக் குரல்களை ஒடுக்கத் துடிக்கும் தவெக அரசின் அடக்குமுறையும், அதிகார துஷ்பிரயோகமுமே இந்த ஆட்சிக்கு முடிவுரை எழுதும்!
அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து ஆதாரப்பூர்வமாகப் பேசிய சென்னை வளர்ச்சி மையத்தின் பேராசிரியரும், பொருளாதார நிபுணருமான திரு. கலையரசன் அவர்களை விசாரணை என்ற பெயரில் காவல் நிலையம் அழைத்துச் சென்று அலைக்களித்த காவல்துறையின் அராஜகப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
வழக்குப்பதிவு செய்யாமல், சம்மன் அனுப்பாமல், அதிகாலை 5 மணியளவில் சீருடைகூட அணியாத காவலர்களை வீட்டிற்குள் அனுப்பி அவரை விசாரணை எனும் பெயரில் அவரை மனதளவில் துன்புறுத்தியிருப்பது எந்த வகையில் நியாயம்? பேராசிரியர் கலையரசன் அவர்கள் என்ன தீவிரவாதியா? அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்துப் பேசியது தேசவிரோதமா?
மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டுவதைப் பார்த்து, எங்கு தனது போலி பிம்பம் உடைந்து விடுமோ என்ற பதற்றத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் இத்தகைய அடக்குமுறையைக் கையாளுகிறாரா?
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் மாயமான சிறுமியை 18 நாட்களாகியும் இதுவரை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் திறனற்ற தவெக அரசும், அதன் ஏவல்துறையாகச் செயல்படும் காவல்துறையும், மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் விலைவாசி உயர்வு குறித்துப் பேசியதற்காக ஒரு பொருளாதார நிபுணரை மிரட்ட முயற்சித்திருப்பது அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சகட்டமாகும்.
ஆட்சியாளர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதும், அரசின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்பதும் ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயக உரிமையாக உள்ள நிலையில், மக்களின் பிரச்சினைகளைப் பேசுபவர்களைக் கைது செய்வதன் மூலமாகவோ, விமர்சனக் குரல்களை ஒடுக்குவதன் மூலமாகவோ ஓர் அரசு தனது தோல்விகளை மறைத்துவிட முடியாது என்பதை முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் உணர வேண்டும்.
ஜனநாயகக் குரல்களை அடக்கி ஒடுக்க நினைக்கும் தவெக அரசின் அடக்குமுறையும், அதிகார துஷ்பிரயோகமுமே இந்த ஆட்சியின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதோடு, மக்களின் குரல்களை ஒடுக்க நினைக்கும் ஆட்சியாளர்களுக்கு ஜனநாயகத்தின் வழியாகவே மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதையும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.