குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் மாணவ- மாணவியருக்கு தமிழக அரசு சார்பில் கேக் வழங்கப்பட்டது.
இதனை, முதலமைச்சர் விஜய் கொளத்தூரில் உள்ள அரசு பள்ளியில் மாணவ- மாணவியருக்கு குழந்தைகள் தின வாழ்த்து அட்டையுடன் கேக் வழங்கினார்.
அந்த வாழ்த்து அட்டையில், All is well.. Confident ah irunga.. என்று குறிப்பிட்டு குழந்தைகள் தின வாழ்த்தை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இதை சுட்டிக்காட்டும் வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,"கேக் கொடுக்கும் அட்டையில் All is Well என்று எழுதி இருக்கிறார்கள்.
உங்கள் ஆட்சியில் “Is all Well CM?"" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் வீரபாண்டி அருகே 11 வயது சிறுமி கடத்தப்பட்டு , கடுமையான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும் , பெரியபாளையம் அருகே மாணவி மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் இவ்வருட குழந்தைகள் தினத்தை ஒட்டி வரும் செய்திகள் மக்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
மாற்றம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த இந்த Deemed தாய்மாமாவின் ஆட்சியில், கடந்த 6 மாதங்களில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான குற்றங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளதை இக்குற்றங்கள் வெட்டவெளிச்சமாக்குகின்றன.
காணாமல் போன செஞ்சி சிறுமியை இன்னும் “விஜய் மாமா”வின் அரசு கண்டுபிடிக்கவில்லை!
ஆனால், இன்றைய தினம் பள்ளிக் குழந்தைகளுக்கு “கேக்” ஊட்டி விடப் போகிறாராம். வெட்கமாக இல்லையா முதலமைச்சர் விஜய் அவர்களே?
கேக் கொடுக்கும் அட்டையில் All is Well என்று எழுதி இருக்கிறார்களாம். உங்கள் ஆட்சியில் “Is all Well CM?”
குழந்தைகளுக்கு பள்ளி, வீடு, சாலை என்று எங்கேயாவது பாதுகாப்பு இருக்கிறதா?
உங்கள் ஆட்சியில் Confident-ஆக இருப்பது குற்றவாளிகள் மட்டும் தான்! இப்படி ஒரு திக்குத் தெரியாத, பாதுகாப்பற்ற ஆட்சியில் எப்படி பெண்கள், பெண் குழந்தைகள் நிம்மதியாக, Confident-ஆக இருக்க முடியும்?
பெண்கள் மீது, பெண் குழந்தைகள் மீது கொஞ்சமாவது உண்மையிலேயே அக்கறை இருந்தால், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வழிவகைகளைப் பாருங்கள்.
திருப்பூர் சிறுமி பாலியல் வழக்கிலும், பெரியபாளையம் மாணவி தாக்குதலிலும் தொடர்புள்ள குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த ஆச்சரியக்குறி அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.