தமிழக செய்திகள்

பெரியார் நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடு: லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைவில் விசாரணை

தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பிலேயே புத்தகங்கள் வாங்கப்பட்டு வருகிறது. இதற்காக அரசின் விதிகள் முழுமையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

கோவை பெரியார் நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம் சாட்டியுள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைவில் விசாரணை தொடங்க உள்ளனர். குறிப்பிட்ட பதிப்பக புத்தகங்கள் அதிகமாக வாங்கப்பட்டதுடன், புத்தக விலைகளும் அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவையில் பெரியார் அறிவுலகம் என்ற பெயரில் கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட நூலகத்தை முதலமைச்சர் விஜய் கடந்த மாதம் திறந்து வைத்தார்.

இந்த நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்று இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வெளிச்சத்துக்கு வந்தது

இந்த விவகாரத்தை பிரபல எழுத்தாளரான பெருமாள் முருகன் வெளிச்சத்துக்கு கொண்டு வந்து உள்ளார். இதுபற்றி பல்வேறு தகவல்கள் வெளியிட்டுள்ள பெருமாள் முருகன் பெரியார் நூலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அகல் விளக்கு என்ற பதிப்பகம் வெளியிட்ட 2 ஆயிரம் புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பல்வேறு பதிப்பகங்கள் இருக்கும் நிலையில் குறிப்பிட்ட பதிப்பக புத்தகங்கள் மட்டும் அதிக அளவில் நூலகத்திற்கு வாங்கப்பட்டு உள்ளதாகவும், அங்குள்ள புத்தகங்களின் விலைகள் அதிக அளவில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

லட்சக்கணக்கில்

அங்குள்ள புத்தகங்களில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்களின் பெயர்களை பார்க்கும் போது அவர்கள் இதற்கு முன்பு எந்த புத்தகங்களையும் எழுதியது போல தெரியவில்லை.

இதன் மூலம் புத்தக கொள்முதலில் லட்சக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாகவும் எழுத்தாளர் பெருமாள் முருகன் புகார் தெரிவித்துள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையில் 2 பக்கங்கள் கொண்ட புகார் மனுவையும் அவர் அளித்து உள்ளார்.

முழுமையான விசாரணை

அந்த புகார் மனுவில் கோவை பெரியார் அறிவுலக நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்கப்பட்டதில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பாக முறையான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்.

அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் உள்ள மற்ற நூலகங்களுக்கு புத்தகங்களை வாங்கியது பற்றியும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்து உள்ளார்.

விரைவில் விசாரணை

இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைவில் நேரடி விசாரணையை தொடங்க உள்ளனர். எப்போதுமே லஞ்ச ஒழிப்பு போலீசில் அளிக்கப்படும் புகார்கள் குறித்து ஆரம்ப கட்ட விசாரணையை முதலில் போலீசார் மேற்கொள்வார்கள்.

இதில் கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் அடுத்தக்கட்டமாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். இதன் பின்னர் யார்-யார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதோ அவர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வழக்குக்கு தேவையான ஆதாரங்களை போலீசார் கைப்பற்றுவார்கள்.

பள்ளிக்கல்வித்துறை

தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பிலேயே புத்தகங்கள் வாங்கப்பட்டு வருகிறது. இதற்காக அரசின் விதிகள் முழுமையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். எந்தெந்த புத்தகங்களை நூலகங்களில் வைக்க வேண்டும் என்பது பற்றி அதிகாரிகள் மட்டத்தில் உரிய ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பார்கள்.

இதன் பிறகே குறிப்பிட்ட பதிப்பகங்களில் இருந்து புத்தகங்கள் வாங்கப்பட்டு அவை நூலகங்களில் வாசகர்கள் படிப்பதற்காக வைக்கப்படும்.

அறிவு சார்ந்தவையாக

இதுபோன்று நூலகங்களில் இடம்பெறும் புத்தகங்கள் அறிவு சார்ந்தவையாகவும், குழந்தைகளை கவரும் வகையிலும், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் பயன்பெறும் வகையிலும் இருக்கும்.

ஆனால் கோவை பெரியார் நூலகத்தில் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட நூல்களும் இடம்பெற்றுள்ளன. அதே நேரத்தில் அங்கு இடம் பெற்றுள்ள பல்வேறு புத்தகங்களில் பிழைகள் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பல எழுத்தாளர்களின் பெயர்கள் நூல்களில் இடம் பெற்றுள்ளன. அவர்கள் யார் என்றே தெரியவில்லை என்ற குற்றம்சாட்டும் பிரதானமாக வைக்கப்பட்டு உள்ளன.

சிக்குகிறார்கள்

இதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் இந்த புத்தகங்களை பெரியார் நூலகத்துக்கு வாங்குவதற்கு யார்-யார் முடிவு செய்தார்கள்? இதில் முறைகேடு எப்படி நடந்து உள்ளது? இதற்காக சட்ட விரோதமாக லஞ்ச பணம் பெறப்பட்டுள்ளதா? என்பது பற்றிய விசாரணையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்த உள்ளனர்.

இது தொடர்பாக விரைவில் அதிரடி விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் வீடுகளில் சோதனை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

மீண்டும் சிக்கல்

பள்ளிக்கல்வித்துறை மீது கடந்த தி.மு.க. ஆட்சியில் தனியார் பள்ளிகளிடம் முறைகேடாக பணம் வசூலிக்கப்பட்டதாக எழுந்து உள்ள குற்றச்சாட்டு தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஏற்கனவே விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து உள்ளனர். இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதன் மூலம் பள்ளிக் கல்வித்துறைக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT