உதயநிதி ஸ்டாலின்
தமிழக செய்திகள்

விசாரணை முடிந்தது: காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்டார் உதயநிதி ஸ்டாலின்- திமுக தொண்டர்கள் ஆரவாரம்

செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணைக்குப் பிறகு காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

தஞ்சையில் நேற்று நடைபெற்ற தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நடிகை குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக த.வெ.க. மகளிர் அணி சார்பில் மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி சங்கர்ராமன் மற்றும் நிர்வாகிகள் தஞ்சாவூரில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் குற்ற எண் 287/2026-ன் கீழ் 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் கைது

இதையடுத்து, சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைத்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை தஞ்சை மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்த உதயநிதி ஸ்டாலினை விசாரணைக்காக போலீசார் தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றனர்.

இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு பிற்பகல் விசாரணைக்கு வந்தது. விசாரணைியன்போது அரசு தலைமை வழக்கறிஞர் வாதாடுகையில் "எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்படுவார். உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை. உதயநிதி விசாரணைக்கு பின் போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்படுவார்" என்று தெரிவித்தார்.

தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்பட்டார்

இதனையடுத்து, விசாரணைக்கு பின்னர் உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும் என ஐகோர்ட் நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார். மேலும், காவல்துறை விசாரணைக்கு உதயநிதி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மாலை 6 மணியளவில் தஞ்சாவூர் அருகே சென்றபோது, திடீரென தஞ்சாவூர் செல்லாமல், தஞ்சை எல்லையில் உள்ள செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். முதலில் இங்கு வைத்து விசாரணை நடத்தக்கூடாது என்று உதயநிதி கூறினார். பின்னர், திமுக தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு விசாரணைக்கு ஒப்புக்கொண்டார்.

ஒன்றரை மணி நேரம் விசாரணை

இதனையடுத்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு போலீசார் இவரிடம் சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் 8.15 மணிக்கு காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து காவில் நிலையத்தில் இருந்து வெளியே வந்தார்.

அவரை வரவேற்க ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடினர். அவர்களுக்கு கையசைத்த படி உதயநிதி ஸ்டாலின் திருச்சி நோக்கி புறப்பட்டார். திருச்சியில் இருந்து இன்று இரவு விமானம் மூலம் சென்னை விரைகிறார்.