விஜய் 
தமிழக செய்திகள்

போதைப்பொருள் ஒழிப்பு தினம்: மெரினாவில் ஓடி விழிப்புணர்வு மாரத்தானை தொடங்கி வைத்த முதல்வர் விஜய்

முதல்வர் விஜய் உறுதிமொழி வாசித்தார்

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் இன்று (ஜூன் 26) அனுசரிக்கப்படுகிறது.

இந்நாளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்களிடையே ஏற்படுத்திடும் வகையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ‘ஸ்டார்ட் ரன், ஸ்டாப் டிரக்ஸ் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம் 2026’ சென்னை, காமராஜர் சாலை, அண்ணா நினைவிடம் அருகில் இன்று காலை நடைபெற்றது.

இதில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் அதிகாலை யிலேயே திரண்டிருந்தனர். இந்த விழிப்புணர்வு ஓட்டத்தை தொடங்கி வைத்து பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் விஜய் காலையிலேயே நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வந்தார்.

மேடையில் ஏறிய முதல்-அமைச்சர் விஜய் அங்கு திரண்டிருந்தவர்களை பார்த்து கையசைத்தார். அவர்களும் கையசைத்து உற்சாக கோஷம் எழுப்பி னார்கள். பின்னர் அங்கு வைக்கப்பட்டு இருந்த போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு அறிவிப்பு பலகையில் முதல்-அமைச்சர் விஜய் ‘ஸ்டார்ட் ரன், ஸ்டாப் டிரக்ஸ்’, ‘ஸ்போர்ட்சை எடு, டிரக்சை விடு’ என்ற விழிப்புணர்வு வாசகங்களை எழுதி ‘பிரியமுடன் விஜய்’ என்று கையெழுத்திட்டார். அவரை தொடர்ந்து அமைச்சர்கள் அதில் கையெழுத்திட்டனர்.

உறுதிமொழி

அதன்பிறகு விழிப்பு ணர்வு ஓட்டத்தில் பங்கேற்ற வர்கள் போதை பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த உறுதிமொழியை முதல்-அமைச்சர் விஜய் வாசிக்க, அதை அனைவரும் திருப்பி சொன்னார்கள்.

போதைப்பொருள் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழியை எடுக்கி றோம் என்று முதல்-அமைச்சர் விஜய் கூறிவிட்டு உறுதிமொழியை வாசித்தார்.

அதன் விவரம் வருமாறு:-

அர்ப்பணிப்பு

போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறி வேன். நான் போதை பழக்கத்துக்கு ஆளாக மாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதை பழக்கத்துக்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறி வுரைகளை வழங்குவேன்.

போதை பழக்கத்துக்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன்.

போதை பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதை பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன்.

மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடக்கம்

பின்னர் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஓட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அவரும் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்க னைகளுடன் ஓட்டத்தில் பங்கேற்றார்.

பங்கேற்பு

இந்த விழிப்புணர்வு ஓட்டத்தில் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்ட விளையாட்டு வீரர்கள் மோகன்குமார் (தடகளம்), வி.பாஸ்கரன் (ஆக்கி), திருமால் வளவன் (ஆக்கி), முகமது ரியாஸ் (ஆக்கி), ராமன் (டேபிள் டென்னிஸ்), சரத்கமல் (டேபிள் டென்னிஸ்), தேவராஜன் (குத்துச்சண்டை), நாகநாதன் பாண்டி (தடகளம்), சி.ஏ. பவானி தேவி (வாள்வீச்சு), தருண் அய்யாசாமி (தடகள வீரர்), ரேவதி (தடகளம்), விருது பெற்ற வீரர்களான ஸ்ரீநிவாச ராவ் (டேபிள் டென்னிஸ் - துரோணாச்சார்யா விருது), ஜோஷ்னா சின்னப்பா (ஸ்குவாஷ் - அர்ஜுனா விருது), அனிதா பால்துரை (கூடைப்பந்து - பத்மஸ்ரீ விருது), கவிதா (கபடி - மேஜர் தியான்சந்த் விருது), வெளிநாட்டு பயிற்சியாளர்கள் பெட்ரோஸ் (தடகளம்), வில்லியம் முர்ரே (ஆக்கி), தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதி விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், கல்லூரி மாணவ, மாணவியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

ஓட்டம்

இந்த போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஓட்டம் காலை 6.30 மணிக்கு சென்னை காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் தொடங்கி தீவுத்திடல் வரை 6 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்றது.

இதில் சுமார் 15 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதில் முதல்-அமைச்சர் விஜய், டி.ஜி.பி. அலுவலகம் வரை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓடினார்.

அமைச்சர்கள்

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, வெங்கட ரமணன், மரிய வில்சன், ரா.குமார், எம்.எல்.ஏ.க்கள், தலைமை செயலாளர் சாய்குமார், டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.அமல்ராஜ், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர் சந்தீப் நந்தூரி, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, சென்னை மாவட்ட கலெக்டர் எஸ்.மாலதி ஹெலன், காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.