தமிழ்நாட்டில் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோத கடத்தலை ஒழிப்பதில் சிறந்து விளங்கிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு, “போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தல் ஒழிப்பு சிறப்பு பணிக்கான தமிழக முதல்வரின் காவல் பதக்கம்” 2023-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் முதலமைச்சர் விஜய் 2026-ம் ஆண்டிற்கான பதக்கங்களை கீழ்கண்ட காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்களுக்கு வழங்க ஆணை பிறப்பித்துள்ளார்.
விவேகானந்த சுக்லா (கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்), ஜி.சந்தீஷ் (ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர்), ஸ்ரீலட்சுமணன் (கூடுதல் காவல் கண்காணிப்பாளர்), போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு, சென்னை.
வை.மனோஜ்குமார் (காவல் உதவி ஆணையாளர்) போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு, சென்னை. மோ.கண்ணன் (காவல் ஆய்வாளர்), மத்திய நுண்ணறிவுப் பிரிவு, திருச்சி மண்டலம், பொ.காமராஜ் (காவல் ஆய்வாளர், மத்திய நுண்ணறிவுப் பிரிவு, கோவை மண்டலம்).
மு.அருண் (காவல் உதவி ஆய்வாளர், குரங்கனி காவல் நிலையம்), கே.ராஜ்குமார் (தலைமைக் காவலர் குமுளி காவல் நிலையம்), க.கார்த்திகேயன் (தலைமைக்காவலர் வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையம்), அ.குத்புதீன் (தலைமைக் காவலர் கோட்டைப்பட்டினம், காவல்நிலையம்). க.ராமர் (சிறப்பு உதவி ஆய்வாளர்-நல்லூர் காவல் நிலையம்), மு.ஐயப்பன் (தலைமைக் காவலர்-மதுவிலக்கு அமலாக்க பிரிவு, நெல்லை).
ந.பிரேம்குமார் (தலைமைக் காவலர்-அசோக்நகர் காவல் நிலையம், சென்னை), உ.பி.செந்தில்குமார் (சிறப்பு உதவி ஆய்வாளர்-மது விலக்கு அமலாக்கப்பிரிவு, கரூர் மாவட்டம்), ச.ராம கிருஷ்ணன் (தலைமைக் காவலர்-போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு, தேனி அலகு).
போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா, ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய காலத்தில், போதைப்பொருள் கும்பல்களை ஒழிப்பதில் சிறப்பாக செயல்பட்டு உள்ளார். இவரது வழிகாட்டுதலின்படி, மேற்கொள்ளப்பட்ட நுண்ணறிவு சார்ந்த நடவடிக்கைகள் மூலம், 903 கிலோ கஞ்சா, 575 கிராம் மெத்தாம்பெட்டமைன், 74.5 கிராம் எம்.டி.எம்.ஏ., 55 கிராம் கோகைன் மற்றும் எல்.எஸ்.டி. தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வெளிமாநில மற்றும் அயல்நாட்டை சேர்ந்த குற்றவாளி கள் உட்பட 82 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொதுமக்கள் பாதுகாப்பிற்கும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை கட்டுப்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி உள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் தான் பணியாற்றிய மாவட்டங்களில் போதைப்பொருள் குற்றங்களை கணிசமாகக் குறைத்து உள்ளார். 2024-ஆம் ஆண்டு முதல் 347 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 640 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். 2025-ம் ஆண்டில், 542 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம், தமிழ்நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய கஞ்சா பறிமுதல் நடவடிக்கையாகும்.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லட்சுமணன் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவர், போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை ஒழிப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.
வை. மனோஜ்குமார் சென்னை பெருநகர நுண்ணறிவுப் பிரிவு காவல் உதவி ஆணையராக போதைப்பொருள் குற்றங்களை ஒழிப்பதில் சிறப்பான சேவையாற்றி வருகிறார். இவரது முயற்சியால், 574 போதைப்பொருள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதுடன், பிற மாநிலங்களைச் சேர்ந்த கடத்தல்காரர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டனர்.
மோ. கண்ணன், காவல் ஆய்வாளர், மத்திய நுண்ணறிவு பிரிவு, திருச்சி மதுவிலக்கு மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக சேவையாற்றி சுமார் ரூ.41 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள், மூலப்பொருட்கள், வாகனங்கள் மற்றும் ஆய்வக உபகரணங்களை பறிமுதல் செய்வதிலும் முக்கிய பங்காற்றியுள்ளார்.
இதேபோல் ஒவ்வொரு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமைக் காவலர்களும் போதைப்பொருள் ஒழிப்பதில் சிறப்பாக செயல்பட்டு உள்ளனர்.
இவர்களுக்கு இந்த பதக்கங்களை முதலமைச்சர் விஜய் வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி சுதந்திர தின விழாவில் வழங்கி சிறப்பிக்க உள்ளார்.