தமிழக செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம் - மலைக்கு செல்லும் CRPF வீரர்கள்

மேடை அமைப்பதற்காக மலை உச்சிக்கு பொருட்களை பணியாளர்கள் எடுத்து செல்கின்றனர்.

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் இன்று தீபம் ஏற்ற உத்தரவிட்டது.

திருக்கார்த்திகை திருநாளில் கோவில்கள் மற்றும் வீடுகளில் தீபம் ஏற்றுவது தமிழர் களின் மரபு ஆகும்.

கார்த்திகை தீபம்

இந்த நாளில் முருகப்பெருமானின் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் காலங்காலமாக தீபம் ஏற்றப்பட்டு வந்ததாகவும், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்த நடைமுறைக்கு தடை விதிக்கப்பட்டதாகவும், எனவே மீண்டும் தீபத்தூணில் தீபம் ஏற்றும் முறையை தொடர வேண்டும் என இந்து அமைப்புகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றன.

மதுரை ஐகோர்ட்

இதற்கு அனுமதி கோரி கடந்த ஆண்டு இந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம.ரவிக்குமார் உள்ளிட்டோர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநா தன், தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி உத்தரவிட்டார்.

ஆனால், சட்டம்-ஒழுங்கு காரணங்களைக் காட்டி அப்போதைய திருக்கார்த்திகை நாளில் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. அதேநேரத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஐகோர்ட்டின் இரு நீதிபதிகள் அமர்வு. தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை கடந்த ஜனவரி 6-ந்தேதி உறுதி செய்தது.

மீண்டும் உத்தரவு மீறல்

மதுரை ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம்.பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த 20-ந்தேதி இடைக்கால உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. அதில். ஐகோர்ட் தீர்ப்பின் விரிவான அம்சங்களுக்கு இடைக்கால தடை விதித்தபோதிலும், 24-ந்தேதி கார்த்திகை தீபத்தன்று ஒருமுறை மட்டும் கடுமையான நிபந்தனைகளுடன் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்தது.

அவமதிப்பு வழக்குகள்

ஆனால், 24-ந்தேதி தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாமல், வழக்கம்போல உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்தில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவை அதிகாரிகள் வேண்டுமென்றே அவமதித்துவிட்டதாகக் கூறி சுப்ரீம் கோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த அவமதிப்பு மனுக்கள் நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம்.பஞ்சோலி அமர்வில் நேற்று விசாரணைக்க வந்தன. அப்போது, தமிழக அரசு அதிகாரிகள் செயல்பாடுகளுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

சுப்ரீம் கோர்ட் உத்தரவு

மேலும், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் இன்று தீபம் ஏற்ற உத்தரவிட்டது. திருப்பரங்குன்றம் மலை முழுவதும் சிஆர்பிஎப் படையின் கட்டுப்பாட்டில் கொண்டுவர உத்தரவிட்டது. மலையில் உள்ள தர்காவில் இருந்து 50 மீட்டர் தொலைவு வரை கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பக்தர்கள் அனைவரும் சென்று தீபம் ஏற்றலாம் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

திருப்பரங்குன்றம் மலை

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் இன்று தீபம் ஏற்றப்பட உள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி முருகன் கோவில் மலை மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. கார்த்திகை தீபம் ஏற்றப்படும் மலை உச்சியில் பாதுகாப்புக்கு துப்பாக்கியுடன் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் சென்றனர். மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களுடன் மதுரை மாநகர காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்பாடுகள் தீவிரம்

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணை சுற்றி தற்காலிக மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேடை அமைப்பதற்காக மலை உச்சிக்கு பொருட்களை பணியாளர்கள் எடுத்து செல்கின்றனர்.

தீபத்தூணில் தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட நிலையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் இன்று அதிகாலை முதல் முருக பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். தீபத்தூணில் இன்று மாலை 6 மணியளவில் தீபம் ஏற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT