பத்திரிகை ஆசிரியர் அருண் ராம் உடைய இன்ஸ்டா பதவு மீண்டும் வெளியானது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டின் முதன்மை ஆசிரியர் அருண் ராம், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசை விமர்சித்து கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.
கடந்த 16 ஆம் தேதி வெளியான அந்த கட்டுரை தவெக அரசின் கீழ் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து கடுமையாக விமர்சித்திருந்தது.
இந்நிலையில் அதற்கு அடுத்த நாளே, அருண் ராம் உள்ளிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா குழுவினர் முதல்வர் விஜய்யை சந்தித்த புகைப்படங்களை கொண்ட அருண் ராமின் இன்ஸ்டாகிராம் பதிவு திடீரென நீக்கப்பட்டது.
இதுதொடர்பாக பதிவிட்ட அருண் ராம், "கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காததற்காக, முதலமைச்சர் சி. ஜோசப் விஜயை விமர்சித்து நான் கட்டுரை எழுதிய மறுநாளே, இன்ஸ்டாகிராமிலிருந்து எனக்கு ஒரு அறிவிப்பு வந்தது.
அதன்படி, ஜூலை 21 அன்று 'டைம்ஸ் ஆப் இந்தியா' குழுவினர் முதலமைச்சர் விஜய்யை சந்தித்த புகைப்படங்களைக் கொண்ட அந்தப் பதிவு, "சட்டப்பூர்வத் தேவைகளின் காரணமாக" இந்தியாவில் பார்க்க முடியாதபடி நீக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "இது பாசிசமா பாயாசமா? டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டின் அருண் ராம், த.வெ.க.வினரின் குற்றப் பட்டியலை தொகுத்து, அதுகுறித்து முதலமைச்சர் விஜய் வாய்திறக்க மறுப்பதை விமர்சித்துக் கட்டுரை எழுதியிருந்தார்.
உடனே, அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
யாருடைய நடவடிக்கையால் இது நிகழ்ந்திருக்கிறது? தமிழ்நாடு அரசின் சைபர் கிரைம் பிரிவுதான் இதன் பின்னணியில் இருக்கிறதா?
இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் ஒரு நாளேட்டின் ஆசிரியருக்கே இதுதான் நிலையா? விமர்சனங்களை ஏற்றுக்கொள்வோம் என்று கூறியவரால், ஊடகங்களில் வெளியான குற்றங்களைத் தொகுத்து வெளியிட்டதையே பொறுத்துக் கொள்ள முடியவில்லையா?" எனக் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்த சூழலில் அருண் ராம் உடைய பதிவு மீண்டும் அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகி உள்ளது.
இன்ஸ்டாகிராமை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனத்தின் உள்நாட்டு கொள்கை தொடர்பான பிரச்சனையால் தான் பதிவு முடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.