சுதந்திர தினத்தையொட்டி வருகிற 15-ந் தேதி முதலமைச்சர் விஜய் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்ற இருப்பதையொட்டி விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
நாட்டின் 80-வது சுதந்திர தின விழா வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் விஜய் முதல் முறையாக தேசியக் கொடியை ஏற்றுகிறார். முன்னதாக போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொள்கிறார். இந்த விழாவில் முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டுக்கும், தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த தகைசால் தமிழர் விருது ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்க இருக்கிறார்.
அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு டாக்டர் அப்துல்கலாம் விருது, துணிவு மற்றும் சாகச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல்ஆளுமை விருது, மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள், மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூகப் பணிகளுக்கான விருதுகள். சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகள், முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் உள்ளிட்ட விருதுகளையும் முதலமைச்சர் விஜய் வழங்கி கவுரவிக்க உள்ளார்.
இந்தநிலையில், கோட்டை கொத்தளத்தில் சுதந்திரத் தின விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. சென்னை தலைமைச் செயலகம் எதிரில் மேடை அமைப்பது உள்ளிட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. வர்ணம் பூசும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன.
சுதந்திரதின விழாவுக்கான அணிவகுப்பு ஒத்திகை மெரினா கடற்கரையில் கடந்த 7-ந்தேதி நடந்தது. தொடர்ந்து, அணிவகுப்பு ஒத்திகை நாளை (செவ்வாய்கிழமை) மற்றும் 13-ந் தேதிகளிலும் நடக்கிறது. அணிவகுப்பு ஒத்திகை நடக்கும் நாட்களில் தலைமைச் செயலகம் மற்றும் மெரினா சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அணிவகுப்பு ஒத்திகை மற்றும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு காமராஜர் சாலை, ராஜாஜி சாலை மற்றும் கொடி மர சாலை ஆகியவற்றில் வாகனங்கள் செல்வதற்கு உரிய அனுமதி அட்டை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
அனுமதி அட்டை இல்லாத வாகன உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த சாலை பகுதிகளை பயன்படுத்த அனுமதி இல்லை. மேலும் பாதுகாப்பு கருதி விமான நிலையம், ரெயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.