சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 20-ந்தேதி வரை பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) சுதந்திர தின விழா, கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு மத்திய அரசின் அறிவுறுத்தலின்பேரில் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளன.
மதுரை விமான நிலையத்தில் நேற்று முதல் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை விமான நிலைய உள்வளாகம், விமான நிலைய ஓடுபாதை, விமான நிலைய சுற்றுப்புற கண்காணிப்பு கோபுரங்கள், விமான நிலைய வெளிவளாகம், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட இடங்களில் மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
24 மணி நேரமும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினரும், மோப்பநாய் படை பிரிவினரும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் பயணிகள் மற்றும் அவர்கள் கொண்டு வரும் உடைமைகள் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
இதுதவிர விமான நிலையத்தின் வெளிப்பகுதிகளான பெருங்குடி, சின்ன உடைப்பு உள்ளிட்ட பகுதிகளில் மாநகர போலீசாரும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விமான நிலையத்திற்குள் செல்ல பார்வையாளர்களுக்கு வருகிற 20-ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மதுரை மாநகர பகுதியில் உள்ள விடுதிகள் சந்தேகத்திற்கிடமாக யாராவது தங்கி உள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுபோல, ரெயில் நிலையம், பஸ் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.