நாட்டின் 80-வது சுதந்திர தின விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அரசியல் கட்சி அலுவலகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.
அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் சுதந்திர தின விழா நடந்தது. அவர் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் சிற்றரசு, முன்னாள் எம்.எல்.ஏ. தாயகம் கவி, அன்பு துரை, வி.எஸ். ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பா.ஜ.க. கட்சி அலுவலகத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், மாநில செயலாளர், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநில செயலாளர் வீர பாண்டியன் தலைமையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் (அகில இந்திய பொதுச் செயலாளர்) ராஜா, நிர்வாகிகள் வகிதா நிஜாம், டாக்டர் ரவீந்திரநாத், சிவா, ஏழுமலை, டாக்டர் சாந்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமை அலுவலகத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றினார். கட்சியின் செங்கொடியை சம்பத் ஏற்றினார். நிர்வாகிகள் குணசேகரன், வேல்முருகன், செல்வா, ஜான்சிராணி, ராஜசேகரன் வில்சன் ஆகியோர் பங்கேற்றனர்.
கோகுல மக்கள் கட்சி சார்பில் உள்ளகரத்தில் அதன் நிறுவனத் தலைவர் எம் .வி. சேகர் தேசியக்கொடி ஏற்றினார். பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கினார்.
தெற்கு ரெயில்வே சார்பில் நடந்த சுதந்திர தின விழாவில் பொது மேலாளர் சுப்பாராவ் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். ரெயில்வே பாதுகாப்பு படையின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். சென்னை ரெயில்வே கோட்ட மேலாளர் சைலேந் திர சிங் தேசியக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார்.
சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் மேலாண்மை இயக்குனர் ஆனந்த் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் இயக்குனர் பர்வீஸ், பொது மேலாளர் சுகுமாரன், தலைமை பொறியாளர்கள் ராதாகிருஷ்ணன், வைதேகி, புஷ்பலதா, சித்ரா, சுகந்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ஐ.சி.எப். ஸ்டேடியத்தில் ஐ.சி.எப். பொது மேலாளர் மனிஷ் அகர்வால் தேசியக்கொடி ஏற்றினார். ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டீன் சாந்தா ராம் தேசியக்கொடியை ஏற்றினார்.
எழும்பூர் ரெயில் நிலையத்தில் நிலைய இயக்குனர் ஜெய காந்தன் தேசியக் கொடி யேற்றினார்.
திருவொற்றியூர் கோர்ட்டில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் சார்பு நீதிபதி பிரபா தாமஸ் கொடியேற்றினார். நிகழ்ச்சியில் உரிமையியல் நீதிபதி ரேவந்த் கலந்து கொண்டார். மணலி மண்டலத்தில் மண்டல குழு தலைவர் ஏ.வி. ஆறுமுகம் தேசிய கொடி ஏற்றி வைத்தார். அவருடன் உதவி ஆணையர் அரவிந்த் செயற்பொறியாளர் தேவேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். திருவொற்றியூர் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் திலிப் குமார் தேசிய கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
திருவொற்றியூர் நாடார் உறவின் முறை சார்பில் நடைபெற்ற விழாவில் தேசியக் கொடியை தலைவர் மதுரை வீரன் ஏற்றி வைத்தார். விழாவில், செயலாளர் எம். காமாட்சி, ராமசாமி சேகர் சோலையப்பன் கே.ராமர் உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைப்பு மாநில தலைவர் ஏ.எம் விக்கிரமராஜா மாநில தலைமை அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றினார். இதில் நிர்வாகிகள் ராஜ்குமார், பாண்டிய ராஜன், ராஜேந்திரன், பாலன் பழனியப்பன் பால்ராஜ் ஜீவானந்தம் கலந்து கொண்டனர்.
மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் பல்லவன் இல்லத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் மேலாண்மை இயக்குனர் மோகன் தேசிய கொடி ஏற்றி வைத்தார். தொழிலாளர்களின் பிள்ளைகளை ஊக்குவிக்கும் வகையில் 10-ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை அவர் வழங்கினார்.
திருவள்ளுவர் நகர் மக்கள் நலச்சங்கம் சார்பில் இன்று சுதந்திர தின விழா தேசிய கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது. விழாவில் திருவள்ளுவர் நகர் குடியிருப்புவாசிகள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.