சென்னை:
சென்னை புறநகர் ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அதிகரிகரிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில் இயக்கப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த சென்னை கோட்டம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, கடந்த நிதியாண்டில் மட்டும் 26 ரெயில் நிலையங்களில் புதிதாக 923 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் மூலம் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்களை தடுக்கவும், பயணிகளின் பாதுகாப்பை கண்காணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய கண்காணிப்பு வளையத்திற்குள் எண்ணூர், அத்திப்பட்டு, மீஞ்சூர், பொன்னேரி, பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ், வில்லிவாக்கம், ஆவடி, திருநின்றவூர், கடம்பத்தூர், வண்ணாரப்பேட்டை மற்றும் ராயபுரம் உள்ளிட்ட 26 முக்கிய நிலையங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு புறநகர் பாதை மற்றும் பறக்கும் ரெயில் வழித்தடம் முழுவதும் இப்போது முழுமையான சிசிடிவி கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுதவிர, சென்னை - அரக்கோணம் மற்றும் சென்னை - கும்மிடிப்பூண்டி வழித்தடங்களிலும் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போது அடுத்தகட்டமாக பூங்கா நகர், தண்டையார்பேட்டை, பெரம்பூர், அம்பத்தூர், திருத்தணி, ஆம்பூர் உள்ளிட்ட 13 ரெயில் நிலையங்களில் 495 கேமராக்களை நிறுவும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
ரெயில் நிலையங்கள் மட்டுமின்றி, பேசின் பிரிட்ஜ், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட 22 முக்கிய ரெயில்வே சந்திப்புகள் மற்றும் ரெயில்வே கேட் பகுதிகளிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ரெயில்வே பாதுகாப்புப் படை கட்டுப்பாட்டு அறையிலிருந்து 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் சென்னை கோட்டத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களையும் கண்காணிப்பு கேமரா வளையத்திற்குள் கொண்டு வருவதே தங்களின் இலக்கு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.