மாமல்லபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் தெரு நாய்கள் அதிகரித்து வருகிறது. அங்குள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோவில், அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டைக்கல் பாறை, பிடாரி ரதம், புலிக்குகை உள்ளிட்ட பகுதிகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவதால் சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் சுற்றிப்பார்த்து வருகின்றனர்.
தற்போது கோடை வெயில் தொடங்கிய நிலையில், அங்கு 100-க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு உடல் முழுவதும் சொறி ஏற்பட்டு, பார்ப்பதற்கு அகோரமாக காட்சி அளிக்கிறது. அருகில் சென்றால் துர்நாற்றமும் அடிக்கிறது. இதை பார்க்கும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் முகம் சுழித்து பயத்துடன் கடந்து செல்கின்றனர். பலர் சமூக வலைதளங்களில் சர்வதேச சுற்றுலா தலத்தின் நிலைமை இது? என கிண்டல் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.
இதனால் மாமல்லபுரம் நகராட்சி மற்றும் தொல்லியல்துறை நிர்வாகம் இணைந்து தெருநாய்களை கட்டுப்படுத்தி, சொறி பிடித்த நாய்களை நகர பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.