அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், வைகோ, திருமாவளவன், மாணிக்கம் தாகூர் போன்ற தனித்தனி கட்சித் தலைவர்கள் த.வெ.க. நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பது சட்ட விரோதம் என வாதிடுகிறார்.
அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
வைகோ, திருமாவளவன், மாணிக்கம் தாகூர் ஆகியோர் தனித்தனி அரசியல் கட்சிகளின் தலைவர்களாக இருக்கும் நிலையில், அவர்கள் மற்றொரு கட்சியான த.வெ.க.வின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பது எந்த சட்ட அடிப்படையில்? ஆர்.பி. சட்டம் 1951 பிரிவு 77(1) மற்றும் தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின் படி, ஒரு கட்சி நட்சத்திர பேச்சாளர்களாக தனது சொந்த கட்சியின் உறுப்பினரையே நியமிக்க முடியும்.
மேலும், நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் தேர்தல் அறிவிப்பில் இருந்து 7 நாட்களுக்குள் தேர்தல் ஆணைய தலைமை ஆணையருக்கு தெரிவிக்கப்பட வேண்டும். தற்சமயம் அந்த காலக்கெடு முடிந்துவிட்ட பிறகு, இனி இவர்கள் தங்களது கட்சிகளின் சார்பில் புதிதாக விண்ணப்பித்து தங்கள் பெயரில் அனுமதி பெற்று பிரிவு 77-ன் செலவு விலக்கைப் பெற முடியாது.
தங்களது சொந்த கட்சித் தலைவர்களாக, கூட்டணிக் கட்சி தலைவர்களாக த.வெ.க. வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்ய இவர்கள் அனுமதிக்கப்பட்டால், நட்சத்திர பேச்சாளர்களுக்கான செலவு விலக்கு இனி இவர்களுக்கு பொருந்தாது.
எனவே, தேர்தல் ஆணைய விதிகளின்படி இவர்களின் சம்பந்தப்பட்ட உரிய பிரசாரச் செலவுகள் மொத்தமும் த.வெ.க. வேட்பாளர்களின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும் என்பதே சட்டம்.
ஒரு வழக்கில் தேர்தல் ஆணையம் இதைத்தான் வலியுறுத்தி இருக்கிறது. இவர்களின் பிரசார செலவுகள் த.வெ.க. வேட்பாளர்களின் கணக்கில் அவ்வாறு சேர்க்கப்படாமல் இருந்தாலோ, இதன்மூலம் த.வெ.க. வேட்பாளர்களின் சட்டப்பூர்வ தேர்தல் செலவு வரம்பு மீறப்பட்டாலோ, அது ஊழல் நடைமுறை என்பதே தெளிவான சட்ட நிலை ஆகும்.
இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டு உள்ளது.