தமிழக செய்திகள்

தி.மு.க.வில் 110 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் விரைவில் நியமனம்- தயார் நிலையில் பட்டியல்

கட்சி மறுசீரமைப்புப் பணிகளில் தவறுகள் அல்லது குளறுபடிகள் இருப்பதாக புகார்கள் எழுந்தால், அதுகுறித்து ஆய்வு செய்ய அரசியல் சாராத ஒரு குழுவை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

உட்கட்சித் தேர்தலுக்கு முன்பாக தி.மு.க.வில் 110 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களை நியமிக்க கட்சி தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

110 மாவட்டங்கள்

2026 சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்து ஆட்சியை இழந்துள்ள தி.மு.க.வில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக, தி.மு.க.வில் இருந்த 77 மாவட்டங்களுக்கு பதிலாக 110 மாவட்டங்களாக உயர்த்தி மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து, மாவட்ட வாரியாக ஒன்றியம், வட்டம், பேரூர், பகுதி என பிரித்து தி.மு.க. தலைமைக்கு சமர்ப்பிப்பதற்காக குழுவும் அமைக்கப்பட்டது.

மேலும் 110 மாவட்டங்களுக்கும் உட்கட்சித் தேர்தலை நடத்தி மாவட்ட செயலாளர்களை நியமிக்கவும் அக்கட்சி முடிவு செய்திருந்தது. இதனிடையே, இடைத்தேர்தல் வந்தததால் இந்த பணிகள் தொய்வடைந்தன.

மாவட்ட பொறுப்பாளர்கள்

இந்நிலையில், உட்கட்சித் தேர்தலுக்கு முன்னதாக தி.மு.க.வின் 110 மாவட்டங்களுக்கும் மாவட்ட செயலாளர்களுக்கு பதிலாக மாவட்ட பொறுப்பாளர்களை நியமிக்க அக்கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக தி.மு.க. இளைஞரணிச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் மாவட்ட பொறுப்பாளர்களாக யார் யாரை நியமிக்கலாம் என்ற பட்டியலை தலைமையிடம் தயாரித்து கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே இது பற்றிய அறிவிப்பை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கட்சி மறுசீரமைப்புப் பணிகளில் தவறுகள் அல்லது குளறுபடிகள் இருப்பதாக புகார்கள் எழுந்தால், அதுகுறித்து ஆய்வு செய்ய அரசியல் சாராத ஒரு குழுவை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதுதவிர தி.மு.க. மாவட்டச்செயலாளர்களுக்கான வயது வரம்பை 70-ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அதனை 75-ஆக உயர்த்த வேண்டும் என சில மாவட்டச் செயலாளர்கள் கோரிக்கை விடுத்ததாகக் தெரிகிறது. ஆனால், இந்தக் கோரிக்கையை கட்சித் தலைமை நிராகரித்து விட்டது.

SCROLL FOR NEXT