சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சுமார் 1.5 கிமீ உயரத்தில், வடகிழக்கு மத்தியப் பிரதேசம் முதல் மன்னார் வளைக்குடா வரை விதர்பா, மரத்வாடா, உள் கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
இன்று முதல் 22-ந்தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகள் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இதற்கிடையே இன்று முதல் 20-ந்தேதி வரை உள் தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.
மேலும் இன்று முதல் 20-ந்தேதி வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்படலாம்.