அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் இணைந்து செயல்பட்டு வரும் இணைப்பு சங்கங்களின் மாவட்ட வாரியான ஆலோசனைக் கூட்டம் கடந்த 29ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று மதுரையில் இந்த தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசிய அதிமுக அதிமுக துணைப் பொதுச்செயலாளர் ஆர்.பி. உதயகுமார்.,
“விளம்பர வெளிச்சத்தில் திமுக ஆட்சி நடத்துவதாக நாங்கள் நாகரிகமாக விமர்சித்தோம். இப்போது இருக்கும் முதலமைச்சர் விஜய், ‘நான் 5 நிமிடம் கொளத்தூரில் பேசியதற்கே மு.க.ஸ்டாலின் கொத்து பரோட்டா ஆகிவிட்டார்’ என்கிறார்.
எவ்வளவு நாகரிகமான பேச்சு? ஓடு..ஓடு..ஓடு என விமர்சிக்கிறார். யார் கரூரில் ஓடினார்? கரூரை யார் சுடுகாடு ஆக்கினார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். எடப்பாடி பழனிசாமி ஒரு கருணையின் வடிவம். விஜய்யை அப்போதே சட்டசபையில் வைத்து உரித்திருக்கலாம்.
ஆனால் இவரோ அவருக்கு வக்காலத்து வாங்கி, அவருக்காக பேசினார். இப்போது அவர் நம்மை பார்த்துக் கூறுகிறார் தூர்ந்துபோன சக்தி என. அதிமுகவின் பெயரைச் சொல்லி தூர்ந்துபோன சக்தி எனக்கூற முதலமைச்சர் விஜய்க்கு தைரியம் இருக்கிறதா? சொல்லமாட்டார்.
ஏனெனில் அதிமுக எம்.எல்.ஏக்களைத்தானே ஆட்டையப் போட்டுக் கொண்டிருக்கிறார். இந்தக் களவாணி, திமுகவும் - அதிமுகவும் கூட்டு எனக் கூறுகிறது.
வருமான வரி கட்டவில்லை என அவருக்கு களவாணி பட்டம் கொடுத்துள்ளது மத்திய அரசு. எம்.எல்.ஏக்களை திருடுவதற்கு நாங்கள்தான் களவாணி எனக்கூறவேண்டும். நேற்றுவரை எங்களிடம் பேசிக்கொண்டிருந்த எம்.எல்.ஏக்கள் இன்று ராஜினாமா செய்கிறேன் எனக் கூறுகிறார்கள். மறுநாள் தவெகவில் இணைகிறார்கள்.
உழைப்பு, லட்சியம், கொள்கை, மக்கள் பணி என்றால் என்ன எனக்கேட்கும் சட்டமன்ற உறுப்பினர்கள். நான் இந்த தொழிற்சங்கக் கூட்டத்தில் சவால் விடுத்துக் கூறுகிறேன். விசில் சின்னத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் முகத்தைப் பார்த்து, சரியாக அவர்களின் பெயரை நீங்கள் (முதலமைச்சர் விஜய்) உச்சரித்து விட்டால், இந்த உதயகுமார் பொதுவாழ்க்கையில் இருந்தே விலகுகிறேன்.” என தெரிவித்துள்ளார்.