பிரபல ஆங்கில நாளிதழின் பத்திரிக்கையாளர் அருண் ராம் என்பவரின் சமூக வலைதளப் பதிவுகள் நீக்கப்பட்டதற்கு திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;
“டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டின் அருண் ராம், த.வெ.க.வினரின் குற்றப் பட்டியலைத் தொகுத்து, அதுகுறித்து முதலமைச்சர் விஜய் வாய்திறக்க மறுப்பதை விமர்சித்துக் கட்டுரை எழுதியிருந்தார்.
உடனே, அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
யாருடைய நடவடிக்கையால் இது நிகழ்ந்திருக்கிறது? தமிழ்நாடு அரசின் சைபர் கிரைம் பிரிவுதான் இதன் பின்னணியில் இருக்கிறதா?
கடந்த ஆட்சிகளின்போதும் அவர் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அப்போது நடக்காதது இப்போது மட்டும் எப்படி நடக்கிறது? யாருடைய உத்தரவினால் நடக்கிறது?
இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் ஒரு நாளேட்டின் ஆசிரியருக்கே இதுதான் நிலையா?
விமர்சனங்களை ஏற்றுக்கொள்வோம் என்று கூறியவரால், ஊடகங்களில் வெளியான குற்றங்களைத் தொகுத்து வெளியிட்டதையே பொறுத்துக் கொள்ள முடியவில்லையா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.