தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கியது தென் மண்டல எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம். இந்த சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த சங்கத்தில் சுமார் 4,500 கியாஸ் டேங்கர் லாரிகள் உள்ளன. இவைகள் அனைத்தும் மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான ஐ.ஓ.சி, பி.பி.சி, எச்.பி.சி ஆகிய ஆயில் நிறுவனங்களுக்கு சொந்தமான சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் எரிவாயுவை சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது.
இதில் சுமார் 1,000 எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரிகள் ஐ.ஓ.சி.யில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த லாரி உரிமையாளர்களுக்கு கடந்த சில வருடங்களாக வாடகை பாக்கி வைத்துள்ளது. ரூ.50 கோடி அளவுக்கு வாடகை பாக்கி வைத்துள்ளது.
ஐ.ஓ.சி. நிலுவையில் உள்ள வாடகை தொகையை லாரி உரிமையாளர்களுக்கு திரும்ப வழங்க வேண்டும் என டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் எண்ணெய் நிறுவன உயர் அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் இதுவரை எண்ணெய் நிறுவன அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஐ.ஓ.சி. நிறுவன உயர் அதிகாரிகளுக்கு தென் மண்டல எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இ-மெயில் மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் நிலுவையில் உள்ள வாடகை பாக்கியை தராவிட்டால் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.
தென் மண்டல எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் வருகிற 16-ந் தேதி நாமக்கல்லை அடுத்துள்ள பொம்மைகுட்டை மேட்டில் நடைபெற உள்ளது. அதில் வேலை நிறுத்த போராட்ட தேதி அறிவிக்கப்படும் என அந்த சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே அமெரிக்கா-ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருகிறது. எல்.பி.ஜி. டேங்கர் லாரி வேலை நிறுத்தம் நடைபெற்றால் தென் மாநிலம் முழுவதும் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும்.