தவெக கூட்டணியில் பாமக இணைந்தால் விசிக வெளியேறும் என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வண்டிமேடு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டுத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
இக்கூட்டத்தில், விசிக தலைவர் திருமாவளவன், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர் ஜோதிமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாலாஜி, சிந்தனைச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் வன்னி அரசு பேசியதாவது:-
திண்டிவனம் தொகுதியில் நம்பிக்கையோடு என்னை போட்டியிட வைத்தார்கள். வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் நன்றி.
திண்டிவனத்தை, திண்டிவளம் என மாற்றுவோம். இந்த தொகுதியில் சமூக நல்லிணக்கத்தை உருவாக்கி வருகிறோம்.
கட்சியை தொடங்கியது முதல் தமிழ் தேசம் என்பதுதான் உயர்மூச்சு, தேசிய இனங்களின் அடையாளம். விடுதலையே மிக முக்கியம் என்பதை முழங்கி வரும் இயக்கம் விடுதலை சிறுத்தைகள்.
பாமக தவெக கூட்டணிக்குள் வந்தால் உங்களுடைய நிலைபாடு என்ன என பலரும் கேட்கிறார்கள்.
பாமக, தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் இடம்பெற்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறும்.
பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்கமாட்டோம். அதற்கான வாய்ப்பில்லை.
பதவி இன்று வரும்.. நாளை போகும்.. ஆனால் கட்சிதான் முக்கியம். அமைச்சர் பதவியை விட திருமாவளவன், விசிகதான் முக்கியம்.
சாதியவாத பாமக, மதவாத பாஜகவுடன் விசிக என்றும் கூட்டணி வைக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.