தமிழக செய்திகள்

மாநிலத்தின் முதலீடுகளை ஒப்பந்த ஊழியர்கள்தான் தீர்மானிக்கிறார்கள் என்றால் அவர்களை நீக்குவதுதான் புத்திசாலித்தனமான நடவடிக்கை - பி.டி.ஆர். சூசகம்

ஒவ்வொரு முறை ஆட்சி மாற்றம் ஏற்படும்போதும் இத்தகைய ஊழியர்களை நீக்கிவிட்டு, புதியவர்களை நியமிப்பதே புத்திசாலித்தனமான செயல்.

தமிழ்நாடு அரசின் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் அமைப்பான கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்திலிருந்து, ரகசிய முதலீட்டுத் தகவல்களை ஆந்திரப் பிரதேசத்திற்குக் கசியவிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் 15 அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் மூவர் தற்போது ஆந்திரப் பிரதேச அரசில் பணியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே அரசுப் பணியாளர்கள் பலரும் முந்தைய திமுக அரசிற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக இதுபோன்ற விவகாரங்கள் வெடிக்கும்போது ஒரு பொதுவான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், எந்த உலகத்தில், எந்தவிதமான முடிவெடுக்கும் அதிகாரமும் இல்லாத (எவ்வளவு காலம் பணியில் இருந்தாலும் சரி) ஒப்பந்த ஊழியர்கள் ஒரு மாநிலத்தின் முதலீட்டு முடிவுகளைத் தீர்மானிக்க முடியும்? என திமுக முன்னாள் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;

முட்டாள்தனம்

இதைவிட ஒரு முட்டாள்தனம் இருக்குமா என நினைக்கும்போதெல்லாம், அவர்கள் அதைவிட மோசமாகச் செயல்பட்டு, என் கணிப்பு தவறு என்பதை நிரூபித்து விடுகிறார்கள்.

எந்த உலகில், எந்தவிதமான முடிவெடுக்கும் அதிகாரமும் இல்லாத (எவ்வளவு காலம் பணியில் இருந்தாலும் சரி) ஒப்பந்த ஊழியர்கள் ஒரு மாநிலத்தின் முதலீட்டு முடிவுகளைத் தீர்மானிக்க முடியும்?

அமைச்சரவை என்ன செய்கிறது?

பன்னாட்டு நிறுவனங்களும் (MNCs) அவற்றின் உயர் அதிகாரிகளும், இத்தகைய இடைநிலை ஒப்பந்த ஊழியர்களின் பேச்சைக் கேட்டு முதலீட்டு முடிவுகளை எடுக்கும் அளவுக்கு அவ்வளவு முட்டாள்களா?

‘கைடன்ஸ்’ அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி (ஐஏஎஸ் அதிகாரி) என்ன செய்கிறார்? தொழில் துறைச் செயலாளர் என்ன செய்கிறார்? ஐடிசி (IDC) என்ன செய்கிறது? தொழில் துறை அமைச்சர் என்ன செய்கிறார்? ஐடிசி பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்கும் அமைச்சரவை என்ன செய்கிறது?

முட்டாள்தனமாக சிந்திக்கும் ஊடகங்கள்

சுமார் 7.5 கோடி மக்கள் தொகையும், 400 பில்லியன் அமெரிக்க டாலர் ஜிடிபியும் கொண்ட ஒரு மாநிலத்தின் முதலீடு மற்றும் வளர்ச்சிப் பாதையை, இடைநிலை ஒப்பந்த ஊழியர்கள் (இவர்களில் சிலர் 2021-க்கு முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்திலிருந்தே இருப்பவர்கள்) தீர்மானிக்கிறார்கள் என்றால், இது ஒட்டுமொத்த அரசியல் செயல்பாட்டிற்கும், ஜனநாயகத்திற்கே கூட எவ்வளவு வருத்தமளிக்கும் விஷயம்!

உண்மையில், ஒவ்வொரு முறை ஆட்சி மாற்றம் ஏற்படும்போதும் இத்தகைய ஊழியர்களை நீக்கிவிட்டு, புதியவர்களை நியமிப்பதே புத்திசாலித்தனமான செயல்... இந்த அமைச்சரும் தற்போதைய அரசாங்கமும் அதைத்தான் செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்...

நொய்டாவைச் சேர்ந்த ஊடகங்கள் வெளிப்படுத்தும் உச்சகட்ட முட்டாள்தனம் இது...” என ஆங்கில ஊடகம் ஒன்றின் செய்தியை மேற்கோள்காட்டி பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT