தமிழக செய்திகள்

‘கடவுள்முன் அனைவரும் சமமெனில் விஐபி தரிசனம் ஏன்?’ - அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

முக்கியஸ்தர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தை தரிசனத்துக்காக ஒதுக்கீடு செய்யுங்கள்

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், சிறப்பு கட்டண தரிசன முறையை ரத்து செய்யக் கோரி விஸ்வ இந்து பரிஷத் வட தமிழ்நாடு பிரிவு தலைவர் பி.சொக்கலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கடவுள் முன் அனைவரும் சமம் என்றால், விஐபி தரிசனம் ஏன் எனவும், இதனால் பல பக்தர்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்; அதை எப்படி எதிர் கொள்ளப்போகிறீர்கள் எனவும் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.வி. பாலசுப்ரமணியம், சாமி தரிசனத்துக்கு கட்டணம் கட்டாயம் இல்லை எனவும், கூட்ட நெரிசலை சமாளிக்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது எனவும், அந்த தொகை கோயிலுக்கு முக்கிய வருவாயாக உள்ளது எனவும் விளக்கம் அளித்தார். மேலும், மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதனையடுத்து பணம் கொடுத்தால் தான் கடவுளை தரிசிக்க முடியுமா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், யாருக்கும் சலுகை காட்டாதீர்கள் அல்லது முக்கியஸ்தர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தை தரிசனத்துக்காக ஒதுக்கீடு செய்யலாம் என தெரிவித்து மனுவுக்கு 6 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.