இந்திய கடலோர காவல் படையின் தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி, சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் ச ஜோசப் விஜயை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
கடலோர பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, மீனவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் (SAR), சட்டவிரோத கடல்சார் நடவடிக்கைகளை தடுத்தல், கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இந்திய கடலோர காவல் படை முன்னாள் வீரர்களின் நலன் ஆகியவை குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.
கடல்சார் அவசரநிலைகளின் போது உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க, மீன்பிடி படகுகளில் 'துயர எச்சரிக்கை ஒலிபரப்பிகள்' (DAT) மற்றும் கட்டாய உயிர் காக்கும் உபகரணங்களை நிறுவுவதன் முக்கியத்துவத்தை இந்திய கடலோர காவல் படை தலைமை இயக்குநர் வலியுறுத்தினார்.
மேலும், தமிழக மீனவர்கள் உட்பட பலரின் உயிரை காப்பாற்றிய வெற்றிகரமான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் விளக்கினார்.
குறிப்பாக, சமீபத்திய புயல் காலங்களில் உயிரிழப்புகள் ஏதுமின்றி பாதுகாத்த கடலோர காவல் படையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் இயற்கை பேரிடர்களுக்கு பிந்தைய மீட்பு பணிகளில் மாநில நிர்வாகத்திற்கு வழங்கப்பட்ட உதவிகள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.
தமிழக காவல் துறை, கடலோர காவல் படை, மீன்வள துறை மற்றும் மாநிலத்தின் பிற தொடர்புடைய துறைகளுடன் இணைந்து செயல்படுவதன் மூலம், வலுவான கடலோர பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய கடலோரக் காவல் படை கொண்டுள்ள உறுதியான நிலைப்பாட்டையும் தலைமை இயக்குநர் மீண்டும் வலியுறுத்தினார்.
பிராந்திய கடல்சார் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதோடு, மீனவ சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் இந்தியக் கடலோரக் காவல் படை மற்றும் தமிழக அரசுக்கு இடையே உள்ள பரஸ்பர உறுதிப்பாட்டை இந்த சந்திப்பு மீண்டும் உறுதிப்படுத்தியது.