'சலோ சன்சத்' பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் மீது சட்டரீதியான அல்லது பழிவாங்கும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாது என்று மத்திய அரசு உறுதியளித்தால் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோருக்கு இதுதொடர்பாக எழுதிய கடிதத்தில், மருத்துவமனையில் தன்னைச் சந்தித்ததற்கும் , தனது உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்ததற்கும் அவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
நியாயமான மற்றும் பொறுப்புக்கூறக்கூடிய கல்விமுறையை கோரியதுதான் மாணவர்களின் ஒரே குற்றம். இதைவைத்து அவர்கள்மீது நடவடிக்கை எடுத்தால் ஜனநாயக நிறுவனங்கள்மீதான பொதுமக்களின் நம்பிக்கை சிதைந்துவிடும் எனவும் எச்சரித்துள்ளார்.
இந்த உத்தரவாதத்தை மத்திய அரசு அளிக்காதபட்சத்தில் தனது உண்ணாவிரதத்தை காலவரையின்றி தொடர வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.