தமிழக செய்திகள்

‘பா.ஜ.க.வை வலுப்படுத்தவே ராஜினாமா செய்தேன்... என்மீது அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கை எடுப்பேன்’ - விமர்சகர்களுக்கு எல். முருகன் எச்சரிக்கை

எனது ராஜினாமாவின் ஒரே நோக்கம், 2029-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக கட்சியை பலப்படுத்துவது.

சமீபத்தில் தனது மத்திய அமைச்சர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை எல்.முருகன் ராஜினாமா செய்தார். தமிழ்நாடு அரசியலில் முழுமையாக இறங்கவே இந்த ராஜினாமா எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால் அவரது ராஜினாமா குறித்து பல்வேறு யூகங்கள் பரவியதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து தன் ராஜினாமா குறித்து தவறான செய்திகளை பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என விமர்சகர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது;

ராஜினாமா

நான் மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்தும், மத்திய அரசின் தகவல், ஒலிப்பரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் பதவியில் இருந்தும் விலக பிரதமரிடம் அனுமதிக் கோரி, அவரின் அனுமதி பெற்றதும் எனது ராஜினாமாவை சமர்ப்பித்தேன்.

எனது ராஜினாமாவின் ஒரே நோக்கம், 2029-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக, அடிமட்டத்தில் இருந்து தொடங்கி கட்சியின் அனைத்து நிலைகளிலும் உள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை மேம்படுத்தி, அவர்களுக்கு தேவையான பயிற்சிகளையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதே ஆகும்.

அவதூறு

கட்சியின் அனைத்து நிலைகளிலும் உள்ள தொண்டர்களை மேம்படுத்தும் நோக்கில் நான் மற்றும் நிர்வாகிகள் மேற்கொண்டுள்ள தற்போதைய பொறுப்பை ஏற்றுக்கொள்ள இயலாத சிலர், சமூக ஊடகங்கள் வாயிலாக தேவையற்ற மற்றும் இழிவான கருத்துகளை பரப்பி வருகின்றனர்.

இத்தகைய கருத்துகள் அவதூறானவை மட்டுமல்லாமல், வன்மையாக கண்டிக்கத்தக்கவை. இந்த கருத்துகள் அனைத்தும் எவ்வித ஆதாரமும் அற்றவை.

இத்தகைய கருத்துகளை பரப்புவது, எனது நற்பெயருக்கும், மதிப்பிற்கும் களங்கம் ஏற்படுத்தும் அவதூறு செயலாகும். மேலும், இவை பிற தனிநபர்களையும் பாதிக்கக்கூடியவை.

இது, தமிழ்நாட்டு மக்களிடையே தேவையற்ற அமைதியின்மையையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும்.

சட்ட நடவடிக்கை

எனவே, எனது ராஜினாமா தொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள அனைத்து உள்ளடக்கங்கள், பதிவுகள் மற்றும் பிரசுரங்களையும் உடனடியாக நீக்குமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

எனது நற்பெயருக்கும், மதிப்பிற்கும் கடுமையான களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை வெளியிட்டதற்காக பொது மக்கள் முன்னிலையில் மன்னிப்பு கோருமாறும் கேட்டுக்கொள்கிறேன். இதனை செய்ய தவறினால், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக, குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்களில் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT