தமிழக செய்திகள்

முதல்வர் விஜய்க்கு வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்: மு.க. ஸ்டாலின்

சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் விஜய், இன்று மதியம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார்.

தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது, பின்னர் காங்கிரஸ் (5), இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகள் (4), விசிக (2), ஐயுஎம்எல் (2) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சி அமைத்துள்ளது. விஜய் நேற்று முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.

இன்று சட்டசபையில் வெற்றி பெற்றவர்கள் முறையாக சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றனர். இதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் பிறகட்சிகளின் தலைவர்களை மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் விஜய் சந்தித்து வருகிறார்.

இன்று மதியம் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை த.வெ.க. தலைவரும், முதலமைச்சருமான விஜய் சந்தித்தார்.

இந்த சந்திப்பிற்குப் பின் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதவியில் "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் அரசியல் நாகரிகத்துடன் என்னை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ஆழ்வார்பேட்டை வீட்டிற்கு வந்த முதலமைச்சர் விஜயை கட்டுத் தழுவி உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார்.