தமிழக செய்திகள்

'நான் சிறையைப் பார்த்தவன்'- திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜரான பின் செந்தில் பாலாஜி பேட்டி!

'அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே பின்னணியில் எங்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. சட்ட ரீதியாக இந்தப் பொய் வழக்குகளை எதிர்கொண்டு முறியடிப்பேன்'

தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) சட்டமன்ற உறுப்பினரிடம் குதிரைப் பேரம் பேச முயன்றதாகப் பதியப்பட்ட வழக்கில், சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி நிபந்தனை கையெழுத்திட்ட பின்னர் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார்.

ஓடி ஒளியவில்லை:

"நான் எந்த தவறும் செய்யவில்லை. சட்டத்திற்கு அஞ்சி நான் எங்கும் ஓடி ஒளியவும் இல்லை. ஏற்கனவே சிறைவாசத்தைப் பார்த்தவன் நான், அதனால் இந்த அரசியல் பழிவாங்கல் வழக்குகளுக்கு எதற்கும் நான் அஞ்சப்போவதில்லை" எனத் தெரிவித்தார்.

முன்ஜாமீன் நடைமுறை:

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படியே வழக்கறிஞர்களைச் கலந்தாலோசிக்க கால அவகாசம் கோரப்பட்டதாகவும், தற்போது நீதிமன்ற உத்தரவுக்குக் கட்டுப்பட்டு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் கூறினார்.

வழக்கில் பெயரே இல்லை:

"காவல்துறையினர் பதிவு செய்த எஃப்.ஐ.ஆர்-இல் எனது பெயரோ அல்லது எனது சகோதரர் அசோக் குமாரின் பெயரோ தொடக்கத்தில் இடம்பெறவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே பின்னணியில் எங்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. சட்ட ரீதியாக இந்தப் பொய் வழக்குகளை எதிர்கொண்டு முறியடிப்பேன்" என்று கூறினார்.

அரசுக்குக் கண்டனம்:

மக்கள் சந்திக்கும் அத்தியாவசியப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு, அரசியல் எதிரிகள் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்வதிலேயே அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜா அளித்த புகாரின் பேரில் பதியப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது. அதனடிப்படையில், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு விசாரணைக்கு விளக்கமளித்து வருகிறார்.

SCROLL FOR NEXT