தமிழக செய்திகள்

இன்றைய தலைமையை நம்பி கெட்டவர்களில் நானும் ஒருவன்: அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. விலகல்

ஒரு நல்ல தலைவர் தான் தலைமையேற்றுள்ள இயக்கத்தின் அனைத்து தொண்டர்களையும் தாயன்பு கொண்டு அரவணைக்க வேண்டும்.

அ.தி.மு.க இயக்கம் இன்று தடம் மாறி இடம் மாறி செல்கின்றது. இன்றைய தலைமையை நம்பி கெட்டவர்கள் பலர் உண்டு. அவர்களில் நானும் ஒருவன்.

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 3-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டது. தேர்தல் தோல்விக்குப் பிறகு அ.தி.மு.க நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து விலகி மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வான முருகுமாறன் அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இவர் கடந்த 2011 மற்றும் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஆவார். கடந்த சட்டசபை தேர்தலில் காட்டுமன்னார் கோவில் தொகுதிக்கு பதிலாக திட்டக்குடி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டார். ஆனால் அங்கு அவர் தோல்வியை சந்தித்தார்.

அ.தி.மு.க.வில் இருந்து விலகல்

இந்த நிலையில் இன்று அ.தி.மு.க. கட்சியில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகுவதாக முன்னாள் எம்.எல்.ஏ. முருகுமாறன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கட்சி தலைமைக்கு கடிதமும் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து நிலை பொறுப்புகளில் இருந்தும் மிகுந்த மனவலியோடு என்னை முழுமையாக விடுவித்துக் கொள்கிறேன்.

ஒரு நல்ல தலைவர் தான் தலைமையேற்றுள்ள இயக்கத்தின் அனைத்து தொண்டர்களையும் தாயன்பு கொண்டு அரவணைக்க வேண்டும். தலைவருக்கு துன்பம் என்றால் தொண்டர்கள் கண்ணீர் சிந்த வேண்டும். தொண்டர்களுக்கு துன்பம், துயரம் என்றால் தலைவரின் கரங்கள் கண்ணீர் துடைக்க வேண்டும். அப்படிபட்ட உன்னத தலைவர்கள்தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் ஆவர். நம்பி கெட்டவர்களில் நானும் ஒருவன் ஆனால் அவர்கள் கட்டிக்காத்த அ.தி.மு.க இயக்கம் இன்று தடம் மாறி இடம் மாறி செல்கின்றது.

இன்றைய தலைமையை நம்பி கெட்டவர்கள் பலர் உண்டு. அவர்களில் நானும் ஒருவன். இன்று கோடிகளை கொண்டவர்களே வேட்பாளர்கள் என தேர்வு செய்ததால் தமிழகத்தில் மூன்றாவது கட்சியாக கடை கோடியில் நமது கழகம் உள்ளது. உழைத்தவர்களை விட்டுவிட்டு கிடைத்தவர்களை வைத்துக் கொண்டு அரசியல் செய்தால் களத்தில் வெற்றி பெறமுடியாது, இனி நமது கழகத்தில் கோடிகள் இல்லாத கொள்கை உரம் கொண்ட ஏழை எளியவர்கள், வறியவர்கள், உண்மையாக உழைப்பவர்கள் அரசியல் அதிகாரம் பெற முடியாது.

துரோகம்

தமிழகத்தை மீட்போம் 2026 நிகழ்வில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் என்னை முன்நிலைபடுத்தி, நம்பிக்கை ஊட்டி இரவு பகலாக வேலைகளை வாங்கி கொண்டு 2026 சட்டமன்ற தேர்தல் களத்தில் 100 சதவீத வெற்றி பெறக்கூடிய எனது சொந்த தொகுதியான காட்டுமன்னார்கோவில் தொகுதியை எனக்கு ஒதுக்காமல் தலைமை செய்த துரோகத்தை என் நெஞ்சம் மறக்க மறுக்கிறது.

மாற்று இயக்கத்தில் இருந்து அழைப்புகள் வந்தபோதும் தலைமை செய்த மாணவப் பருவம் முதல் நகமும் சதையுமாக உடலும் உயிருமாக பயணித்து பணியாற்றிய இப்பேரியக்கத்தில் இருந்து விலக்கி கொள்ள வேண்டிய சூழ்நிலையை தலைமை எனக்கு ஏற்படுத்திய நிலையை எண்ணி மனம் வலிக்கின்றது. "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னை வளர்த்த கட்சி" "நான் வளர்த்த கட்சி" என்ற நினைவுகள் என்றும் என் மனதில் நிலைத்து நிற்கும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

அ.தி.மு.க.வில் இருந்து விலகிய, முருகுமாறன் இளம் வயதில் இருந்து அ.தி.மு.க.வில் பயணித்தவர். அ.தி.மு.க.வின் மாவட்ட துணை செயலாளர், இளைஞர் அணி இணை செயலாளர், மாநில அமைப்பு செயலாளர் என பல பதவிகளை வகித்துள்ளார். தற்போது அ.தி.மு.க அமைப்பு செயலாளராக பதவி வகித்து வந்தார்.

SCROLL FOR NEXT