தமிழக செய்திகள்

வளர்ச்சிக்கு எதிரானவன் நான் அல்ல..!- மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய் உரை!

திமுகவிற்கு மறைமுகமாக மற்றும் பலர் உதவுகிறார்கள்.

மதுராந்தகம் தொகுதி த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் விஜய் இன்று பிரசாரம் செய்கிறார். மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட அச்சரப்பாக்கத்தை அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைக்கு வந்த முதலமைச்சர் விஜய்க்கு பொதுமக்கள், ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அமைச்சர்கள் ஆனந்த், மரியவில்சன், விஸ்வநாதன், காங்கிரஸ் எம்பி சுதா உள்ளிட்டோர் முதலமைச்சர் விஜயை வரவேற்றனர்.

முதலமைச்சர் விஜய் மதுராந்தகம் ஆத்தூர் சுங்கச்சாவடி அருகேயுள்ள பொதுக்கூட்ட மேடைக்கு வந்தடைந்தார். இதனால், முதலமைச்சர் விஜயை பார்த்த தொண்டர்கள் உற்சாகமாக முழக்கமிட்டனர்.

முன்னதாக மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து பரப்புரை செய்ய வந்த முதலமைச்சர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில், மதுராந்தக பிரசாரத்தில் பேச ஆரம்பித்த முதல்வர் விஜய் "என் நெஞ்சில் குடியிருக்கும் மதுராந்தக தொகுதி மக்களுக்கு வணக்கம்" என தனது தனித்துவ வசனத்துடன் உரையை துவங்கினார்.

அப்போது முதலமைச்சர் விஜய் உரையாற்றியதாவது:-

முதல்வராக நான் இன்று வரவில்லை, இடைத்தேர்தலுக்காக ஓட்டு கேட்டு வந்துள்ளேன்; எப்பவும் போல் உங்கள் வீட்டு மகனாக அண்ணனாக தம்பியாக வந்துள்ளேன்.

ஏன் உங்கள் விஜய் ஆட்சிக்கு வரக்கூடாதா? தவெக ஆட்சிக்கு வரக்கூடாதா? தனிக்கட்சியாக, பெண்கள், இளைஞர்கள் ஆதரவோடு, லஞ்சம், ஊழலை ஒழிக்க உங்கள் விஜய் ஆட்சிக்கு வரக்கூடாதா?

ஏன் இந்த திமுக... ஸாரி, கொஞ்சம் டச் விட்டுருச்சு... இந்த தீய சக்தி... ஓம் சக்தி, பராசக்தி... இந்த தீய சக்தியால் ஆபாச நதியாக ஓடுகிறது.

நாட்டில் ஒரே ஆபாச நதியாக ஓடிக்கொண்டிருப்பதை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். திமுகவில் பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் ஆபாசமாக பேசுவதை மக்கள் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.

திமுகவிற்கு மறைமுகமாக மற்றும் பலர் உதவுகிறார்கள். மற்றும் பலர் யார் தெரியுமா? அதிமுக தான். ஜெ., பற்றி தவறாக பேசியவர்களுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முயன்றவர்களின் முகமூடி கிழிந்தது தெரியாமல் கூவிக் கொண்டிருக்கிறார்கள். யார் என்ன கூவினாலும், நம்ம ரூட் ஸ்ட்ரைட் ரூட்.

108 இடங்களில் வென்ற த.வெ.க.,வை ஆட்சி அமைக்க விடாமல் தடுக்க தி.மு.க.,வுடன் இணைந்து அதிமுக முயற்சி; பா.ஜ.க.,வின் கிளையாக இருந்த அ.தி.மு.க தற்போது தி.மு.க.,வின் கிளையாகியுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோற்றாலும் ஜெயிச்சாலும் அவர் என் Uncle. அவர் என் Sweet Uncle.

மக்களுக்கு நல்லது செய்யவே கடன் வாங்குகிறேன்; கொள்ளையடிப்பதற்காக அல்ல நான் வளர்ச்சிக்கு எதிரானவன் இல்லை; என்னால் எதைச் செய்ய முடியுமோ அதைச் செய்து வருகிறேன்.

கடன் வாங்குகிறேன் எதற்காக?" மக்களுக்கு நல்லது செய்வதற்காக... கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டுமென்பதற்காக.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT