தமிழக செய்திகள்

‘நான் கிறிஸ்தவன்... தாக்குதல், தற்காப்பு இரண்டும் தெரியும்’ - சட்டப்பேரவையில் ஆவேசமான அமைச்சர் மரியவில்சன்!

எனக்கு ஒரு மொழியை எங்கள் கிறிஸ்தவம் கற்றுக் கொடுத்துள்ளது. அன்பு மொழி, அமைதி மொழி, இரக்கத்தின் மொழி. எவ்வளவு தமிழ் படித்தாலும், பாதி பேருக்கு இது தெரியாது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் தொடர்பான விவாத கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்றைய விவாதத்தின்போது பேசிய கடையநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன்.,

“நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது, நான் ஒரு சொற்பொழிவாளன், தமிழ் ஆர்வலன் என்ற முறையில் உன்னிப்பாக கவனித்தேன். அவர் ஆங்கிலத்தில் பெரும்புலமை பெற்றவராக இருப்பார் என்று நினைக்கிறேன். ஆங்கில உச்சரிப்பு நேர்த்தியாக இருந்தது.

தமிழில் சில சொற்றொடர்களை பேசாமல் விட்டுவிட்டார். சில தொடர்கள் இலக்கண பிழையுடன் அமைந்தன. இதை குறையாகவோ, குற்றச்சாட்டாகவோ அவையில் வைக்க விரும்பவில்லை.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தனது கட்சிக்காக வெகுவாக வாதாடி, பலம் சேர்க்கிறார் என்பதை நாம் காண்கிறோம். வருங்காலத்தில் நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையை வாசிக்கும் நிலை இருக்குமானால், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர் பிழையின்றி பேச முயற்சிகள் எடுக்கவேண்டும்.” என தெரிவித்தார்.

அதற்கு சபாநாயகர், “எம்.எல்.ஏ ராஜேந்திரன் பேசும்போது பட்ஜெட் என்று சொல்கிறார். தமிழில் நிதிநிலை அறிக்கை என்று சொன்னால் நன்றாக இருக்கும்” என்றார்.

தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் கருத்துக்கு பதில் கொடுக்கும் வகையில் பேசிய நிதியமைச்சர் மரிய வில்சன்.,

நான் ஒரு கூடைப்பந்து விளையாட்டாளர். தாக்குதல், தற்காப்பு இரண்டும் எனக்குத் தெரியும். எப்போது தாக்கவேண்டும், எப்போது தடுக்கவேண்டும் என எனக்குத் தெரியும். நீங்கள் கத்தினால் நானும் கத்துவேன். நான் 25 முதல் 30 ஆண்டுகளாக கல்வித்துறையில் இருந்திருக்கிறேன். என்னுடைய தொடர்புமுறை எல்லாம் ஆங்கிலத்தில்தான் இருந்திருக்கின்றன.

இந்த மாமன்றத்தில் அவர் கூறியவாறு கொஞ்ச நாளாகவே உருவ கேலி, சாதி மற்றும் பெண்களைக் கேலி செய்தவர்கள், இப்போது மொழி கேலிக்கு வந்துவிட்டார்கள். எனக்கு ஒரு மொழியை எங்கள் கிறிஸ்தவம் கற்றுக் கொடுத்துள்ளது. அன்பு மொழி, அமைதி மொழி, இரக்கத்தின் மொழி. எவ்வளவு தமிழ் படித்தாலும், பாதி பேருக்கு இது தெரியாது.

நான் பைபிள் படித்திருக்கிறேன். கிறிஸ்தவனாக பிறந்துள்ளேன். உங்களுக்கு அந்த மொழிதான் வேண்டும் என்றால், உங்கள் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஐந்து வருடமாக மக்களவையில் இருந்துள்ளார். அவர் பேசியதே கிடையாது. நான் முயற்சி செய்கிறேன்.

நான் உங்களுக்காக எதையும் மாற்றிக்கொள்ள முடியாது. நான் இப்படித்தான் பேசுவேன். என்னுடைய ஸ்டைல் இதுதான். ராஜேந்திரனுக்காக என்னை மாற்றிக்கொள்ள முடியாது. கேலி செய்கிறீர்களா? என கோவமாக பதிலளித்தார்.