கள்ளத்தொடர்பை கண்டித்ததால் கணவனை மனைவியே கொன்று நாடக மாடிய சம்பவம் கறம்பக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கீழ வாண்டான் விடுதியை சேர்ந்தவர் சூரியபிரகாஷ். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந்தார். இவரது மனைவி சரண்யா (34). இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் நடைபெற்றது. 10 வயதில் ஒரு மகளும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்டு 16-ந்தேதி இரவு சூரியபிரகாஷ் வீட்டின் உத்திரத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி சரண்யா மழையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அங்கு சென்ற போலீசார் சூரிய பிரகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே த.வெ.க. நிர்வாகி சூரியபிரகாஷ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், கொலைக்கான தடயம் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்த நிலையில், ஒரு மாதமாகியும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என கேட்டு சூரிய பிரகாஷின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். மேலும் வருகிற 30-ந்தேதி சாலை மறியல் நடத்த போவதாக அறிவித்தனர். இந்நிலையில் சூரிய பிரகாஷின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பது உறுதியானது. அவரது மர்ம உறுப்பு மற்றும் உடலில் காயங்கள், எலும்பு முறிவு இருந்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சரண்யாவிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. அப்போது கள்ளத்தொடர்பு விவகாரத்தில் சரண்யாவே அவரது கணவரை கொலை செய்தது தெரியவந்தது.
சரண்யா திருப்பூரில் வேலை பார்த்து வந்த போது அங்கு ஒருவருடன் பழகி வந்துள்ளார். சூரியபிரகாசை திருமணம் செய்த பின்னரும், கள்ளக்காதலனுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார். இதனை சூரியபிரகாஷ் கண்டித்துள்ளார். இந்த பிரச்சினையில் அவர் கணவனை கொன்று நாடக மாடியது தெரியவந்துள்ளது.
இதையடுத்து சரண்யாவை கைது செய்த போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்துவதற்காக அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். அப்போது நடத்தப்படும் விசாரணையின் மூலம் சூரியபிரகாசை கொலை செய்ததற்கான காரணங்கள் குறித்து மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
கள்ளத்தொடர்பை கண்டித்ததால் கணவனை மனைவியே கொன்று நாடக மாடிய சம்பவம் கறம்பக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.