மதுபோதையில் தகராறு செய்த கணவரை மனைவியே எரித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் அல்லம்பட்டி வி.வி.ஆர். காலனியை சேர்ந்தவர் சங்கர் குரு (வயது 35). கட்டிட தொழிலாளியான இவருக்கு திருமணமாகி சங்கேஸ்வரி (32) என்ற மனைவியும், சத்தியவாணி (12) என்ற மகளும், சந்தோஷ் (7) மகனும் உள்ளனர்.
இதற்கிடையே மது போதைக்கு அடிமையான சங்கர்குரு தினமும் பணி முடிந்து குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.
மேலும் தனது சம்பளத்தில் பெரும் பகுதியை அவர் குடித்தே அழித்து வந்துள்ளார். இதனை பலமுறை அவரது மனைவி சங்கரேஸ்வரி மற்றும் உறவினர்கள் கூறி கண்டித்துள்ளனர். மேலும் சங்கர்குரு கொடுக்கும் குறைந்த பணத்தை கொண்டு குடும்பம் நடத்தவும், குழந்தைகளை வளர்க்கவும் மிகுந்த சிரமப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்து வந்தார்.
இருந்தபோதிலும் சங்கர்குரு மது பழக்கத்தை கைவிடவில்லை. மாறாக அளவுக்கு அதிகமாக போதையில் வீட்டுக்கு வந்து மனைவி சங்கரேஸ்வரியை பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கி வந்துள்ளார். அத்துடன் குழந்தைகள் என்றும் பார்க்காமல் அவர்களையும் சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். இதனால் திருமண வாழ்க்கையை வெறுத்த சங்கரேஸ்வரி கணவரை பிரியும் முடிவுக்கு வந்தார்.
இதையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு இருவரும் கோர்ட்டு மூலம் விவகாரத்து பெற்று தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். குழந்தைகள் இருவரும் தாய் சங்கரேஸ்வரியுடன் இருந்துள்ளனர். தனது பெற்றோரின் உதவியுடன் அவர்களை படிக்க வைத்து வந்தார். இதற்கிடையே சங்கரேஸ்வரியின் உறவினர்கள் கூறிய அறிவுரையை ஏற்றும், தனது குழந்தைகளின் எதிர்கால நலனுக்காகவும் மீண்டும் தனது கணவர் சங்கர்குருவுடன் அவர் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.
இந்தநிலையில் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக சங்கர்குரு, பழையபடி மதுபோதையில் வீட்டுக்கு வருவதும், மனைவியை சித்ரவதை செய்வதையும் தொடர்ந்தார். நேற்று இரவு பணி முடிந்து குடித்துவிட்டு வீடு திரும்பிய சங்கர்குரு, மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் தூங்கிவிட்டார். அப்போது குழந்தைகள் இருவரும் அவர்களது பாட்டி வீட்டுக்கு சென்றுவிட்டனர்.
மீண்டும் இன்று அதிகாலையில் எழுந்த அவர், மனைவியை தாக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சங்கரேஸ்வரி, வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து கணவர் சங்கர்குரு மீது ஊற்றி தீ வைத்தார். இதில் அவர் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. உடனடியாக சங்கரேஸ்வரி வீட்டுக்கு இருந்து வெளியில் ஓடிவந்து விட்டார்.
உடலில் பற்றி எரிந்த தீயுடன் வீட்டிற்குள் அங்குமிங்கும் ஓடிய சங்கர்குரு, சமையல் அறைக்குள் சென்றார். மேலும் அவர் நிலை தடுமாறி கியாஸ் சிலிண்டர் மீது விழுந்தார். இதில் அங்கிருந்த கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அப்போது ஏற்பட்ட தீயானது அருகிலுள்ள இரண்டு வீடுகளுக்கும் பரவியது. இதில் சங்கர்குரு வீடு உள்பட மொத்தம் மூன்று வீடுகளும் தீயில் எரிந்து சேதமானது.
அதிர்ஷ்டவசமாக பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் வெளியே தப்பி வந்து உயிர் பிழைத்தனர். இதில் 3 வீடுகளிலும் இருந்த பொருட்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து சாம்பலானது. தகவலறிந்து விரைந்து வந்த விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீசார் வீட்டுக்கு எரிந்த நிலையில் கரிக்கட்டையாக கிடந்த சங்கர்குருவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவ இடத்தை விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதுகுறித்து விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் கணவரை எரித்துக் கொன்ற சங்கரேஸ்வரி, அருகிலுள்ள கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். மதுபோதையில் தகராறு செய்த கணவரை மனைவியே எரித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.