தமிழக செய்திகள்

கூடி ஆலோசிக்கும் தி.மு.க கூட்டணி கட்சிகள்.. காங்கிரஸ் உடன் த.வெ.க பேச்சுவார்த்தை

கூட்டணி ஆட்சியை தேர்வு செய்த மக்களுக்கு நன்றி என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில், பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தமிழக வெற்றி கழகம் பெறாத நிலையில், கூட்டணி ஆட்சி அமைக்க விஜய் அழைப்பு விடுத்தால், ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தவெகவிற்கு காங்கிரஸ் ஆதரவளிக்கலாம் என கூறப்படுகிறது. காங்கிரஸ் உடன் தவெக பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மறுபுறம் தாங்கள் கணித்தது போல தொங்கு சட்டசபை அமைந்ததாவும், கூட்டணி ஆட்சியை தேர்வு செய்த மக்களுக்கு நன்றி என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தது அவர் தவெக ஆதரவு நிலைப்பாடு எடுப்பாரா என்ற கேள்வியையையும் எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில், த.வெ.க 108 இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில், த.வெ.க தலைமையில் ஆட்சி அமைக்க இன்னும் 10 இடங்கள் தேவையாக உள்ளது.

கீழ்வேளூர் மற்றும் பத்மநாபபுரம் ஆகிய 2 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மேலும் தளி மற்றும் திருத்துறைப்பூண்டி ஆகிய 2 தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றி பெற்றுள்ளது.

மேலும் மயிலாடுதுறை, மேலூர், கொளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 5 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திண்டிவனம் மற்றும் காட்டுமன்னார்கோவில் ஆகிய 2 தொகுதிகளை அக்கட்சியின் வேட்பாளர்கள் கைப்பற்றி உள்ளனர்.

இந்த நிலையில், இந்த குறிப்பிட்ட கட்சிகள் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில், தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் ஆட்சி பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.