தமிழக செய்திகள்

திருத்தணி முருகன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு

பழமை வாய்ந்த சிறிய கோபுரத்தில் இருந்து யாழி சிலை உடைந்து விழுந்தது.

இந்து அறநிலையத்துறையின் தலைமை பொறியாளர் மகாவிஷ்ணு, செயற்பொறியாளர் சேகர் ஆகியோர் திருத்தணி முருகன் மலைக்கோவில் சிலை உடைந்து விழுந்த இடத்தை ஆய்வு செய்தனர்.

திருத்தணி முருகன் கோவிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொது வழியில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த பழமை வாய்ந்த சிறிய கோபுரத்தில் இருந்து யாழி சிலை உடைந்து விழுந்தது.

இதில் சாமி தரிசனத்திற்கு வரிசையில் சென்று கொண்டிருந்த பெண் பக்தர்கள் உள்பட 4 பேருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து கோவிலில் சேதமடைந்த சிலைகளை ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் இந்து அறநிலையத்துறையின் தலைமை பொறியாளர் மகாவிஷ்ணு, செயற்பொறியாளர் சேகர் ஆகியோர் திருத்தணி முருகன் மலைக்கோவில் சிலை உடைந்து விழுந்த இடத்தை ஆய்வு செய்தனர். தொடர்ந்து கோவிலில் சேதமடைந்து உள்ள சிலைகள் மற்றும் அதன் உறுதி தன்மையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் சேதமடைந்த சிலைகளை சீரமைப்பது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆய்வின்போது கோவில் இணை ஆணையர் ரமணி, உதவி செயற்பொறியாளர் தமிழன்பு, கோவில் கண்காணிப்பாளர் சித்ரா தேவி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT