போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி படித்து வரும் அதே கல்லூரியில், குற்றம் சாட்டப்பட்ட ஜார்ஜ் ஆபிரகாமை மீண்டும் முதல்வராக நியமித்தது எப்படி என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் இயங்கி வரும் உடற்கல்வியியல் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றியவர் ஜார்ஜ் ஆபிரகாம். இவர் மீது கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாகப் புகார்கள் எழுந்தன. இது குறித்த புகாரின் பேரில் சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.
பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், அதே உடற்கல்வியியல் கல்லூரியின் முதல்வராக ஜார்ஜ் ஆபிரகாம் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டார். இவரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி என்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகி வாதிடுகையில், ஜார்ஜ் ஆபிரகாமுக்கு எதிராகப் பாலியல் தொல்லை தொடர்பான புகார்கள் உள்ளதாகவும், தமிழ்நாடு மகளிர் ஆணையமே அவரைப் பணியில் இருந்து நீக்கப் பரிந்துரைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
பாதிக்கப்பட்ட மாணவி படித்து வரும் அதே கல்லூரியில் குற்றஞ்சாட்டப்பட்டவர் மீண்டும் முதல்வராக நியமிக்கப்பட்டிருப்பது மாணவியின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் உள்ளதாகவும், சாட்சிகளை அவர் மிரட்ட வாய்ப்புள்ளது என்றும் வாதிட்டார். மேலும், போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும் இன்னும் விசாரணையே தொடங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
இருதரப்பு வாதங்களையும் கவனமுடன் கேட்ட நீதிபதி, போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி கல்வி கற்கும் அதே கல்லூரியில், குற்றம் சாட்டப்பட்டவரையே மீண்டும் முதல்வராக நியமித்தது எப்படிக் கல்லூரி நிர்வாகம் அனுமதித்தது எனத் கேள்வி எழுப்பினார். மேலும், அவரைப் பணியில் இருந்து இடமாற்றம் செய்யத் கோரி நீதிமன்றமே உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்தார். இந்த வழக்கில் ஜார்ஜ் ஆபிரகாம் தரப்பு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, போக்சோ வழக்கு விசாரணை ஏன் இன்னும் தொடங்கப்படவில்லை என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நவம்பர் 6 ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.