கண்டோன்மென்ட் இடத்தை ஆக்கிரமித்ததாக கூறி ஆலந்தூரில் வீடுகள், கடைகள் இடிக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வாக்குவாதம் செய்தனர்.
பரங்கிமலை கண்டோன்மென்ட் பகுதிக்கு உட்பட்ட ஆலந்தூர் ஆசர்கானா பகுதியில் கண்டோமென்ட் இடத்தை ஆக்கிரமித்து கடைகள், வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக கூறி இன்று காலை ஜே.சி.பி. எந்திரத்துடன் கண்டோன்மெண்ட் அதிகாரிகள் வந்தனர்.
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் கடைகள், வீடுகளை இடிக்கக் கூடாது என்று அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பெண்கள் திடீரென்று சாலையில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து உதவி ஆனையர் பசுபதி மற்றும் அலுவலர்கள் அப்பகுதி மக்களிடம் நீதிமன்றம் உத்தரவு இருக்கிறது. அதன்படி தான் செய்கிறோம் என்றனர். ஆனால் அப்பகுதி மக்கள் நாங்கள் 35 ஆண்டுகளுக்கு மேலாக இங்கே வசித்து வருகிறோம். முறையாக கண்டோன்மென்டுக்கு வாடகை செலுத்துகிறோம். வரி செலுத்துகிறோம். பின்பு ஏன் இடிக்கிறீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கண்டோன்மென்ட் அலுவலர்கள் போலீசார் உதவியுடன் கடைகளை அகற்றினர். இதனால் கிண்டி கத்திப்பாராவிலிருந்து ஆலந்தூர் செல்லும் ரெயில்வே சாலையை போலீசார் முழுவதுமாக மூடிவிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.