தமிழக செய்திகள்

மெரினா கடற்கரையில் சிறுமியிடம் பாலியல் சீண்டல்- குதிரை ஓட்டி கைது

குதிரை ஓட்டியை மெரினா போலீசில் ஒப்படைத்தனர்.

மெரினா கடற்கரைக்கு செல்பவர்கள் குதிரை சவாரி செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள் குறிப்பாக சிறுவர் சிறுமிகள் குதிரையில் அமர்ந்து சவாரி செய்வதை அதிகம் விரும்புவார்கள்.

இதுபோன்று குதிரை சவாரி செய்யும்போது சிறுவர் சிறுமிகளை முன்னாள் அமர வைத்து குதிரை ஓட்டுபவர் பாதுகாப்புக்காக பின்னால் அமர்ந்திருப்பார். அந்த வகையில் மெரினாவுக்கு குடும்பத்தோடு சென்றிருந்த 6 வயது சிறுமி குதிரை சவாரி செய்வதற்காக விருப்பப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து அவரது பெற்றோர் குதிரை ஓட்டி ஒருவரை அழைத்து குதிரைசவாரி செய்வதற்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனை தவறாக பயன்படுத்திக் கொண்ட குதிரை ஓட்டி 6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதுபற்றி சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததை தொடர்ந்து அவர்களும் அங்கிருந்தவர்களும் குதிரை ஓட்டியை சரமாரியாக அடித்து உடைத்துள்ளனர்.

பின்னர் குதிரை ஓட்டியை மெரினா போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து குதிரை ஓட்டியான நித்திஷ் என்பவரை கைது செய்தனர்.

18 வயது வாலிபரான இவர் இதுபோன்று குதிரை சவாரி ஈடுபட்ட மற்ற சிறுமிகளிடமும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு உள்ளாரா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக ஐஸ் அவுஸ் மகளிர் போலீசார் குதிரை ஓட்டி நித்திஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் கூறும்போது,"குதிரை சவாரிக்கு அனுப்பும்போது தங்களது பெண் குழந்தைகளை பெற்றோர்கள் மிகுந்த கவனமோடு பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.