தமிழக செய்திகள்

நாகர்கோவில் ஜெயிலில் நடந்த பயங்கரம்: வியாபாரியை கொடூரமாக கொன்ற 8 கைதிகள்

சபரிவர்மனின் உடலை பார்க்கவிடாததால் அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சபரிவர்மனின் உடலை பார்க்க அவரது மனைவி, தாய் மற்றும் உறவினர்களில் சிலர் அனுமதிக்கப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே உள்ள வடக்கு தாமரைகுளம் ஈத்தங்காடு பகுதியை சேர்ந்தவர் சபரிவர்மன் (வயது33). வியாபாரியான இவர் தனது வீட்டின் அருகே பெட்டிக்கடை நடத்தி வந்தார்.

ஜெயிலில் மரணம்

இந்தநிலையில் அவரது கடையில் கடந்த 9-ந்தேதி தென்தாமரைகுளம் போலீசார் நடத்திய சோதனையில், தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து வியாபாரி சபரிவர்மனை போலீசார் கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் (13-ந்தேதி) காலை சபரிவர்மன் சிறையில் உயிரிழந்துவிட்டதாக அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

போலீசார் மீது குற்றச்சாட்டு

சபரிவர்மன் இறந்த தகவலறிந்து அவரது மனைவி ஆனந்தவல்லி மற்றும் உறவினர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர். அவர்கள் சபரிவர்மன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், நல்ல உடல்நலத்துடன் ஆரோக்கியமாக இருந்த அவரை போலீசார் அடித்துக் கொன்று விட்டதாகவும் குற்றம் சாட்டினர்.

மேலும் சபரிவர்மனின் உடலை பார்க்கவிடாததால் அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சபரிவர்மனின் உடலை பார்க்க அவரது மனைவி, தாய் மற்றும் உறவினர்களில் சிலர் அனுமதிக்கப்பட்டனர்.

உடலை வாங்க மறுப்பு

அப்போது அவரது உடல் முழுவதும் பலத்த காயங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சபரிவர்மன் நிச்சயமாக கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கூறிய அவர்கள், அவரது சாவுக்கு காரணமானவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அதுவரை சபரிவர்மனின் உடலை வாங்கமாட்டோம் என்று கூறி போராட்டம் நடத்தினார்கள். சபரிவர்மனின் குடும்பத்தினருக்கு ஆதரவாக பொதுமக்கள் ஏராளமானோரும் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

நீதிபதி விசாரணை

இதற்கிடையில் ஜெயிலில் சபரிவர்மன் இறந்தது குறித்து நாகர்கோவில் 2-வது குற்றவியல் நீதித்துறை நடுவர் சத்தியமூர்த்தி விசாரணை நடத்தினார். அவர் சபரிவர்மனின் மனைவி மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்.

பின்னர் நாகர்கோவில் சிறைக்கு சென்று சிறைக்காவலர்கள் மற்றும் மற்ற கைதிகளிடமும் விசாரணை மேற்கொண்டார். அது மட்டுமின்றி குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டானிலும் நாகர்கோவில் ஜெயிலுக்குள் சென்று விசாரணை நடத்தினார்.

3 பேர் கைது

இந்தநிலையில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடந்த பிரேதப் பரிசோதனையில், சபரிவர்மனின் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் ஜெயிலுக்குள் வைத்து அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது.

அதன்பேரில் நேசமணி நகர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சபரிவர்மன் கொலை தொடர்பாக நாகர்கோவில் ஜெயிலின் முதன்மை சிறை வார்டனான நெல்லை மாவட்டம் களக்காட்டை சேர்ந்த திருமலை நம்பி, வார்டன்களான தேங்காய்பட்டணத்தை சேர்ந்த ஜெகன், சாமியார்மடத்தை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 3 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பரபரப்பு தகவல்கள்

அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கடந்த 12-ந்தேதி இரவு சிறையில் சபரிவர்மனுக்கும், சக கைதிகள் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது சக கைதிகள் அவரை தாக்கியுள்ளனர்.

மேலும் சபரிவர்மனை கை கால்களை கட்டிவைத்து ஜெயில் வார்டன்களும் தாக்கியிருக்கின்றனர். வார்டன்களுடன் ஏறுகனவே தகராறு செய்த சக கைதிகளும் சேர்ந்து தாக்கியுள்ளனர். அதில் உடல் முழுவதும் பலத்த காயமடைந்த சபரிவர்மன் இறந்துவிட்டார். மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

8 கைதிகள் கைது

இதையடுத்து வார்டன்களுடன் சேர்ந்து சபரிவர்மனை தாக்கிய கைதிகள் யார்? என்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவரை தாக்கியது விஷ்ணு (21), சாரதி (19), ஜெகன் (40), சரத், பெருமாள், சேதுராம் (30), அஜித் (29), அரவிந்த் (27) ஆகிய 8 கைதிகள் என்பது தெரியந்தது.

இதையடுத்து அவர்களின் மீதும் போலீசார் கொலை வழக்குப்பதிந்தனர். அதன்பேரில் 8 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் சபரிநாதன் கொலை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்று கைது செய்யப்பட்டிருக்கும் வார்டன்கள் மற்றும் கைதிகளிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3-வது நாளாக போராட்டம்

இதற்கிடையில் சபரிவர்மனின் மரணத்திற்கு நீதி கேட்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் உரிய நிவாரணம் வழங்கக் கோரியும் அவரது உடலை பெற்றுக்கொள்ள மறுத்து உறவினர்கள் இன்று மூன்றாவது நாளாக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை வளாகத்தில் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினரும் திரண்டுள்ளனர். இதனால் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட வியாபாரி ஜெயிலுக்குள் அடித்து கொல்லப்பட்ட சம்பவத்திற்கு தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.