தமிழக செய்திகள்

வானூர் அருகே பயங்கரம்: காதலை கைவிட மறுத்ததால் மகளை கழுத்தை நெரித்து கொன்ற தந்தை

இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள வி.பரங்கனி கிராமத்தை சேர்ந்தவர் சிவசாஸ்திரி(வயது 40). லாரி டிரைவர்.

10-ம் வகுப்பு மாணவி

இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர். இதில் 2-வது மகள் விகாஷினி(14) வானூர் அருகே உள்ள கரசானூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

விகாஷினி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ராணிப்பேட்டை மாவட்டம் காரை கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

காதல்

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி 2 பேரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் மாணவியின் பாட்டிக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் உடனடியாக தனது மகள் மற்றும் மருமகனிடம் இந்த தகவலை தெரிவித்து, உங்கள் மகளை உங்களுடனே அழைத்து சென்று விடுங்கள் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து சிவசாஸ்திரி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ராணிப்பேட்டைக்கு சென்று விகாஷினியை வானூருக்கு அழைத்து வந்தார். இங்கு வந்ததும் நீ நன்றாக படிக்க வேண்டும். படிக்கும் காலத்தில் காதல் எல்லாம் வேண்டாம் என அறிவுரை கூறினார்.

கண்டிப்பு

மேலும், வானூரில் பள்ளியில் மாணவியை படிக்க சேர்த்தார். இந்தநிலையில் இங்கு வந்த பின்னரும் மாணவி, செல்போனில் அந்த வாலிபருடன் பேசி வந்ததாகவும், அவ்வப்போது சென்று பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை அறிந்த மாணவியின் தந்தை அவரை கண்டித்துள்ளார். ஆனாலும் சிறுமி, வாலிபருடன் பேசி வந்ததாக தெரிகிறது.

நேற்று மாணவியின் தாய், ராணிப்பேட்டையில் உறவினர் ஒருவர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார். இதனால் நேற்றிரவு வீட்டில் சிவசாஸ்திரி மற்றும் அவரது மகள்கள் இருந்தனர். அனைவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு தூங்க சென்றனர்.

வாக்குவாதம்

அப்போது சிவசாஸ்திரி தனது மூத்த மகளை அழைத்து, நீ அருகே இருக்கும் சித்தப்பா வீட்டிற்கு சென்று தூங்கு. இங்கு நானும், தங்கையும் இருந்து கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

அவரும் அப்பாவின் சொல்லை கேட்டு அங்கு சென்றார். மூத்த மகள் சென்ற பின்னர் சிவசாஸ்திரி, விகாஷினியிடம் இதுதொடர்பாக பேசியுள்ளார்.

இது படிக்கும் வயது. நீ நன்றாக படிக்க வேண்டும். நல்ல நிலைக்கு வர வேண்டும். அந்த வாலிபருடனான பேச்சை நிறுத்தி விடு என அறிவுரை வழங்கினார். ஆனால் மாணவி, அந்த வாலிபரை தான் காதலிப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கழுத்தை நெரித்துக்கொலை

வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த சிவசாஸ்திரி, பெற்ற மகள் என்றும் பாராமல் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

பின்னர் தனது சகோதரரை செல்போனில் தொடர்பு கொண்டு மகள் எனது பேச்சை கேட்காததால் நான் அவளை கொன்றுவிட்டேன். நீங்கள் வந்து பாருங்கள் என கூறினார்.

இதைக்கேட்டதும் அதிர்ச்சியான அவர் ஓடி வந்து பார்த்தார். அப்போது அங்கு விகாஷினி மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு வானூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

கைது

இதற்கிடையே சிவசாஸ்திரி தனது மகளை கொலை செய்துவிட்டதாக கூறி வானூர் போலீசில் சரண் அடைந்தார்.

உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உயிரிழந்த மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வானூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மாணவியின் தந்தை சிவசாஸ்திரியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலை கைவிட மறுத்ததால் பெற்ற மகளை, தந்தையே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT