தொடர் மழை காரணமாக நாளை (அக்.26) கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது.
இந்நிலையில் நாளை புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
பெரம்பலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட மற்ற மாவட்டங்களுக்கு மிதமான மழை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளுக்கும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.