தமிழக செய்திகள்

அறங்காவலர் நியமனத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - இந்து சமய அறநிலையத்துறை

214 கோயில்களின் அறங்காவலர் பதவிக்கு ஆகஸ்ட் 12 மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 214 முக்கியத் திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்ய விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறையின் மக்கள் தொடர்புப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது...

'மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் சீர்மிகு நல்லாட்சியில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சீ.ரமேஷ் அவர்களின் வழிகாட்டுதலின்படி இதுவரை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள 9,205 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழிசாரா அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

இதில் சட்டப்பிரிவு 46(iii)-ன் கீழ் உள்ள 214 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழிசாரா அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்காக கடந்த 14.06.2026 அன்று தமிழ் மற்றும் ஆங்கில முன்னணி நாளிதழ்களிலும், இத்துறையின் வலைதளத்திலும் விளம்பரம் செய்யப்பட்டது. விண்ணப்பங்களை 22.07.2026 மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான இறுதிநாள் இன்றுடன் நிறைவடையும் நிலையில், பக்தர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, அதிகப்படியான தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக, விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் 12.08.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுடைய விருப்பமுள்ள பக்தர்கள், நிர்ணயிக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, 12.08.2026 அன்று மாலை 5.45 மணிவரை இணையத்தளம் வாயிலாக பதிவேற்றம் செய்து / நேரில் / அஞ்சல் மூலமாக அந்தந்த திருக்கோயில் அமைந்துள்ள மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பலாம்' என்று தெரிவிக்கப்படுகிறது.