தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் சில்லறை விற்பனை கடைகளை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ‘மனமகிழ் மன்றம்’ என்ற பெயரில் தனியார் மதுபான கடைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது தனியார் நடத்தும் இந்த எப்.எல்.-2 மனமகிழ் மன்றங்களுக்கான சிறப்பு கட்டணத்தை தமிழ்நாடு அரசு 2 மடங்காக உயர்த்தி உள்ளது. முன்னதாக சென்னை மாநகராட்சியில் எப்.எல்.-2 மனமகிழ் மன்றம் தொடங்க ரூ.15 லட்சமும் மற்ற மாநகராட்சி பகுதிகளில் ரூ.10 லட்சமும் சிறப்பு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
தற்போது சென்னையில் மனமகிழ் மன்றம் தொடங்க ரூ.30 லட்சம் ஆகவும், சென்னையை தவிர இதர மாநகராட்சிகளில் 10 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகமான மாநகராட்சிகளில் சிறப்பு கட்டணம் ரூ. 25 லட்சம் ஆகவும், 10 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் சிறப்பு கட்டணம் ரூ.20 லட்சம் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மேலும் நகராட்சிகளில் மனமகிழ் மன்றங்கள் அமைக்க ரூ.15 லட்சமும், மற்ற இடங்களில் ரூ.10 லட்சமும் சிறப்புக் கட்டணமாக அரசு நிர்ணயித்து உள்ளது.