தமிழக செய்திகள்

வணிக சிலிண்டர் விலை உயர்வுக்கு காரணம் இதுதான்

உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் ஏற்றி செல்லப்படும் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியில் மூடப்பட்டுள்ளதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஒரே நிலையில் இல்லை.

இந்தியாவில் வணிக பயன்பாட்டு கியாஸ் சிலிண்டர் விலை இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்ந்து உள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்து மூடப்பட்டே இருப்பதால் கச்சா எண்ணெய் மற்றும் கியாஸ் வினியோகம் உலகம் முழுவதுமே பாதிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க இப்போதைய சூழ்நிலையில் வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படவில்லை. அதே நேரத்தில் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வானது டீக்கடைகள், ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் நடத்துபவர்களை கடுமையாக பாதித்துள்ளது.

உலகளாவிய அளவில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு மற்றும் இந்தியாவின் விலை நிர்ணய உத்தி ஆகியவை தான் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர காரணமாக அமைந்துள்ளது.

தற்போது கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 111 டாலராக அதிகரித்துள்ளது. வினியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் அதிகரிப்புக்கு அமெரிக்கா- ஈரான் இடையே நிலவி வரும் போர் தான் காரணமாகும்.

உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் ஏற்றி செல்லப்படும் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியில் மூடப்பட்டுள்ளதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஒரே நிலையில் இல்லை. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வினியோகம் குறையும் அபாயம் கியாஸ் விலையில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்துகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வந்தபோதிலும், மத்திய அரசு, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. இதனால் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்ய வில்லை. அதேபோல் பெட்ரோல், டீசல் விலைகளையும் உயர்த்தவில்லை.

இந்த பிரிவுகள் மொத்த நுகர்வில் கிட்டத்தட்ட 80 முதல் 90 சதவீதம் பங்கை கொண்டு உள்ளன. மேலும் இவற்றை நிலையாக வைத்திருப்பது பண வீக்கத்தை கட்டுப்படுத்தவும், குடும்பங்களின் பட்ஜெட்டை பாதுகாக்கவும் உதவுகிறது.

அதே நேரத்தில் எண்ணெய் நிறுவனங்களால் முழு செலவு சுமையையும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே அதை சமாளிக்கும் வகையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளன. இதனால்தான் ஓட்டல்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் சிறு வணிகங்கள் இதன் தாக்கத்தை எதிர்கொள்கின்றன. ஆனால் வீட்டு நுகர்வோர் இப்போதைக்கு பாதிக்கப்படவில்லை. வணிக பயன்பாட்டு கியாஸ் சிலிண்டர் விலை உயர்வால், உணவு சேவை, விருந்தோம்பல் மற்றும் சிறு உற்பத்தி போன்ற துறைகள் நேரடியாக பாதிக்கப்படும்.

இந்த வணிகங்கள் தங்களின் அன்றாட செயல்பாடுகளுக்கு கியாஸ் சிலிண்டர்களை பெருமளவில் சார்ந்திருப்பதால், அதிகரிக்கும் செலவுகள் வாடிக்கையாளர்கள் மீது சுமத்தப்பட வாய்ப்புள்ளது. இது உணவகங்களில் உணவு பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கக்கூடும்.

பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு இப்போதைக்கு வீட்டு உபயோக சிலிண்டர் விலையை உயர்த்தாமல் அரசு அந்த சுமையை ஏற்றுக்கொள்வதால், தற்போதைக்கு பொதுமக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இல்லை. ஆனாலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நீண்ட காலத்திற்கு உயர்ந்தே இருந்தால், கியாஸ் சிலிண்டர் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

ஆனாலும் இப்போதைக்கு சிலிண்டர் விலை உயர்வில் இருந்து வீட்டு நுகர்வோரை பாதுகாப்பதில் மத்திய அரசு தெளிவாக உள்ளது.