தமிழக செய்திகள்

கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க தடையில்லை - மதுரை ஐகோர்ட்

நீதிபதிகள், அரசுப்பணி வழங்குவது குறித்து சட்டசபையில் அறிவித்துள்ளீர்களா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

கரூர் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க தடையில்லை என்று ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டது.

கரூர் பிரசார கூட்ட நெரிசல்

கரூர் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் நேற்று முன்தினம் முறையிடப்பட்டது. ஆனால், அவசரமாக விசாரிக்க ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.

இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு மதுரை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இறந்து போனவர்கள் குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு வேலை வழங்குவதால் என்ன தவறு. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பொருளாதார உதவி தேவை தானே? என்று கேட்டனர்.

சிபிஐ விசாரணை

அரசு தரப்பில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐ விசாரணையில் உள்ளது. சுப்ரீம் கோர்ட் விசாரணையை கண்காணித்து வருகிறது.

மனுதாரர் தரப்பில், கும்பகோணம் மகாமகம் சம்பவத்தில் அரசுப்பணி வழங்கவில்லை. ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு, தருமபுரி பஸ் எரிப்பு சம்பவங்களிலும் அரசுப்பணி வழங்கவில்லை என்று தெரிவித்தனர்.

நீதிபதிகள், அரசுப்பணி வழங்குவது குறித்து சட்டசபையில் அறிவித்துள்ளீர்களா? என கேள்வி எழுப்பினர்.

மனுதாரர் தரப்பில், கருணை அடிப்படை பணிக்கான விதிகளை பின்பற்ற வேண்டும். அல்லது புதிய விதிகளை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இழப்பீடு

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஏற்கனவே இழப்பீடு வழக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு தரும் நிலையில் தற்போதைய ஆட்சியினர் அரசுப்பணி வழங்குவதாக மனுதாரர் குற்றம்சாட்டினார்.

இதையடுத்து அரசு தரப்புக்கும் மனுதாரருக்கும் இடையே காரசார வாதம் நடைபெற்ற நிலையில், கோர்ட் அரசியல் மேடை அல்ல என நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.

அரசு பணிக்கு தடையில்லை

இந்நிலையில், கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க தடையில்லை. அரசின் கொள்கை தொடர்பான முடிவில் தலையிட விரும்பவில்லை. தற்காலிகமாக பணி வழங்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.