தமிழக செய்திகள்

பெரம்பூர், திருச்சி கிழக்கு வெற்றிக்கு எதிரான வழக்கு - முதலமைச்சர் விஜய்க்கு ஐகோர்ட் நோட்டீஸ்

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டார்.

சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி முதலமைச்சர் ஜோசப் விஜய் வெற்றிப் பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட 4 தேர்தல் வழக்குகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம், விஜய் ஆகியோர் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சட்டசபை தேர்தல்

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டார். இந்த 2 தொகுதிகளிலும் அவர் வெற்றிப் பெற்றார். பின்னர், திருச்சி கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ., பதவியை அவர் ராஜினாமா செய்து விட்டார்.

பெரம்பூர் தொகுதி

இந்தநிலையில், விஜய் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து அந்த தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த தி.மு.க., வேட்பாளர் ஆர்.டி.சேகர் தேர்தல் வழக்கை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். அதேபோல, வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோரும் விஜய் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு தொடர்ந்தனர்.

திருச்சி கிழக்கு தொகுதி

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வெற்றிப் பெற்றதை எதிர்த்து தி.மு.க., வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தேர்தல் வழக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்குகள் எல்லாம் ஐகோர்ட்டு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது.

முதலமைச்சர் விஜய்

வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த தேர்தல் வழக்குகளில் பல குறைபாடுகள் உள்ளன. அதையெல்லாம் மனுதாரர்கள் தரப்பில் சரி செய்து புதிய மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனுக்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம், முதலமைச்சர் ஜோசப் விஜய் விரிவான பதில் மனுவை 4 வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஆதவ் அர்ஜூனா

அதேபோல, வில்லிவாக்கம் சட்டசபை தொகுதியில் த.வெ.க., சார்பில் போட்டியிட்ட ஆதவ் அர்ஜூனா வெற்றிப் பெற்றார். இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில். தி.மு.க., சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த கார்த்திக் மோகன் தேர்தல் வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கும் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்திய தேர்தல் ஆணையம்

அப்போது நீதிபதி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, தேர்தல் வழக்குகளை 6 மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும். அதனால், இந்த வழக்கிற்கு பதில் மனுவை இந்திய தேர்தல் ஆணையம், ஆதவ் ஆர்ஜூனா ஆகியோர் பதில் மனுவை 4 வாரத்துக்குள் தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார்.