தமிழக செய்திகள்

இதுவும் தேவைதானுங்கோ... ஆண்கள் பாதுகாப்புக்கு ‘ஹெல்ப்லைன்’ வசதி: அரசுக்கு நூதன கோரிக்கை

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சராசரியாக 10 ஆயிரம் ஆண்கள் தற்கொலை செய்கிறார்கள். இதற்கு காரணம் குடும்ப பிரச்சனைகள்.

ஆண்கள் பாதுகாப்புக்காக தனி ஹெல்ப்லைன் வசதி உருவாக்க வேண்டும் என தமிழக ஆண்கள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. குடும்ப பிரச்சனைகள் மற்றும் தவறான வழக்குகளால் ஆண்கள் துயரத்தில் ஆழ்கிறார்கள். இதை தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக பெண்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்றுதான் பேசப்படும்.

ஆனால் ஆண்கள் படும் துயரம் வெளியே தெரிவதில்லை. அவர்களுக்கு உதவி செய்யவும் அரசுகள், சட்டங்கள் முன்வருவதில்லை என்று ஆண்கள் தரப்பும் ஆதங்கப்படுகிறது.

புதிய சட்டம்

நாளை (நவ.19) உலக ஆண்கள் தினம். இதையொட்டி தமிழக ஆண்கள் பாதுகாப்பு சங்க தலைவர் அருள் துயிலன் அரசுக்கு ஒரு நூதனமான வேண்டுகோளை வைத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் பெருகி வரும் கள்ளத்தொடர்பு கொலைகளை தடுத்திட தகாத உறவில் ஈடுபடும் ஆண், பெண் இருவருக்கும் கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் புதிய சட்டத்தை அரசு இயற்ற வேண்டும்.

பெண்கள் பாதுகாப்புக்காக கொண்டு வரப்பட்ட போக்சோ சட்டம் தவறாகவும் பயன்படுத்தப்படுகிறது. சென்னையில் சமீபத்தில் இளைஞர் ஒருவர் இந்த சட்டத்தில் கைது செய்யப்பட்டார். விசாரணையில் போலீஸ் அதிகாரி பணம் பெற்றுக்கொண்டு பொய்யாக வழக்கு பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

குடும்ப பிரச்சனைகள்

இதேபோல் பல சம்பவங்கள் நடந்து வருகின்றன. இவ்வாறு தவறாக வழக்குப்பதிவு செய்யும் அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அப்பாவி ஆண்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சராசரியாக 10 ஆயிரம் ஆண்கள் தற்கொலை செய்கிறார்கள். இதற்கு காரணம் குடும்ப பிரச்சனைகள். மனைவி மற்றும் குடும்பத்தினரின் வன்முறைதான் என்பது தெரிய வருகிறது.

தற்கொலை

பெண்களின் பாதுகாப்புக்கும் அவர்களுக்கு உடனடியாக உதவுவதற்கும் தனி ‘ஹெல்ப்லைன்’ வசதி அரசு செய்து கொடுத்துள்ளது. ஆனால் ஆண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை பற்றி முறையிட்டு நிவாரணம் தேட எந்த வசதியும் கிடைப்பதில்லை. எனவே அரசு உடனடியாக ஆண்களுக்கும் தனி ஹெல்ப்லைன் வசதி உருவாக்க வேண்டும்.

சட்டங்களும் பெண்களுக்கு ஆதரவாகவே இருக்கின்றன. இதனால் ஆண்கள் தங்கள் தரப்பு நியாயத்தைகூட தெரிவிக்க முடியாமல் தண்டனைக்கு ஆளாகிறார்கள். குடும்ப பாரத்தை சுமக்கும் ஒவ்வொரு ஆண் மகனும் சில மனைவிகள் மூலம் ஏற்படும் துயரங்களையும் சுமக்கிறார்கள். அதில் இருந்து விடுபட முடியாமல் தவிக்கிறார்கள். தங்கள் பிரச்சனைகளை சொல்லவும் முடியாமல், சொன்னாலும் நீதி கிடைக்காது என்பதாலும் தற்கொலை முடிவுக்கு செல்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில் ஆண்களை பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. எனவே ஆண்கள் பாதுகாப்புக்கான இந்த சாதாரண உதவியை யாவது உடனடியாக செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

காலம் போகும் போக்கில் இதுவும் தேவைதாங்கோ... ‘ஆண் என்ன பெண் என்ன எல்லாம் ஓரினம்தானே...’.

SCROLL FOR NEXT